தமிழகம் முழுவதும் இன்று வாக்கு அளிக்க உள்ள 6.23 கோடி வாக்காளர்கள்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு.
தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனுடன் நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என ஆக மொத்தம் 102 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருக்கின்றது.
ஆகவே, அதற்காக பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது இந்தியத் தேர்தல் ஆணையம். தேர்தல் நடைமுறைகள் குறித்து விளக்கம் அளிப்பதற்காகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக மொத்தம் 68,321 வாக்கு சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 6.23 கோடி. ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.06 கோடி. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3.17 கோடி. மற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை 8,467.முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம். 80 வயதுக்கு மேல் உள்ள வாக்காளர்கள் - 6,14,002; 3.32 லட்சம் பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். மொத்த வேட்பாளர்கள் எண்ணிக்கை - 950. ஆண் வேட்பாளர்கள் 874, பெண் வேட்பாளர்கள் 76 பேர்.மாற்றுத்திறனாளிகள் 4 லட்சத்து 61 ஆயிரத்து 771 பேர் உள்ளனர்.
1,58,568 வாக்குப் பதிவு இயந்திரங்களும் 81,157 கன்ட்ரோல் யூனிட்களும், 86,858 விவிபேட்டும் பயன்படுத்தப்படவுள்ளன. 44,800 வாக்குச் சாவடிகள் வெப் கேஸ்டிங் நுட்ப முறையில் வாக்குப் பதிவு நேரடியாகக் கண்காணிக்கப்படும். 65 சதவீத வாக்குச் சாவடிகள் ஆன்லைன் மூலம் கண்காணிக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கைக்காக 39 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுவான தேர்தல் கண்காணிப்பாளர்கள் 39 அதிகாரிகளும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் 20 அதிகாரிகளும் செலவுக் கணக்குகளைக் கண்காணிக்க 58 அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்திலிருந்து மத்திய ஆயுத போலீஸ் படையினர் 190 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர். அதில் தேர்தல் முடிந்த பிறகு 50 மத்திய காவல்துறையினரை வாக்கு எந்திரங்களைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்த உள்ளோம்.
தமிழ்நாட்டில் நேற்று வரை ரூ.173.85 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்டுள்ள மதுபானங்களின் மதிப்பு 6.67 கோடி.இலவச பொருட்களின் மதிப்பு 35.78 கோடி. இதுவரை தேர்தல் ஆணையத்தின் செயலி மூலம் 4861 புகார்கள் வந்துள்ளன. அதில் 22 புகார் மட்டுமே நிலுவையில் உள்ளன.மற்ற புகார்கள் மீது நடவடிக்கை முழுமையாக எடுக்கப்பட்டுவிட்டது.
"வாக்காளர் அடையாள அட்டையைத் தவிர, ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கி பாஸ் புக், ஹெல்த் இன்சூரன்ஸ் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட 12 ஆவணங்கள் எடுத்து சென்று வாக்களிக்கலாம். அது ஏற்றுக் கொள்ளப்படும். ஆகவே, வாக்காளர் அடையாள அட்டைதான் முக்கியம் என்பது இல்லை.
ஆனால், வாக்களிக்க வாக்காளர் பட்டியலில் பெயர் கட்டாயம் இருக்க வேண்டும். அது இல்லை எனில் வாக்களிக்க முடியாது. வாக்காளர் பெயர் உள்ளதா என அறிய வாக்காளர் உதவி ஆப் என்று ஒன்று உள்ளது. அதில், வாக்காளர் தனது எண்ணைப் பதிவு செய்தால், அது எந்த வாக்குச்சாவடி என்பதை உடனே காட்டி விடும். அதனால் அலைச்சல்களைத் தவிர்க்கலாம்.
இவ்வாறு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu