முதல்வர் முன்னிலையில் கையெழுத்தான 5 முக்கிய ஒப்பந்தங்கள்

முதல்வர் முன்னிலையில் கையெழுத்தான 5 முக்கிய ஒப்பந்தங்கள்
X
முதலீட்டாளர்களிடம் கலந்துரையாடிய முதல்வர் ஸ்டாலின்.
சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். இந்த மாநாட்டில், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம், தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), பேம்டிஎன் (FameTN), டான்சிம் (TANSIM) மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) ஆகியவை சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பல்கலைக்கழகமான SUTD (Singapore University of Technology & Design), சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அமைப்பு-SIPO (Singapore India Partnership Office) மற்றும் சிங்கப்பூர் இந்தியா தொழில் வர்த்தக கூட்டமைப்பு-SICCI (Singapore Indian Chamber of Commerce and Industries) ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

மேலும், புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுபிக்கும் வண்ணமும் தமிழ் கலை பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும் கலாச்சார பரிமாற்ற சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆண்டுதோறும் 200 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து பண்டைய தமிழர்களின் கட்டிடம்/சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள் மற்றும் அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்காக சிங்கப்பூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 இளைஞர்களுக்கு தெரிவு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி. உலகத் தரத்திலான திறமைகள், போதுமான உள்கட்டமைப்பு, நில வங்கிகள் மற்றும் கொள்கை ஸ்திரத்தன்மை ஆகியவற்றுடன் கூடிய முதலீட்டுத் தளமாக தமிழ்நாடு விளங்குவதை நிகழ்வில் கலந்துகொண்ட 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுக்கு எடுத்துக்காட்டப்பட்டது.

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுவதைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அடுத்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னையில் நடைபெறும் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அவர்களை அழைத்துள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது