4 சதவீத அகவிலைப்படி உயர்வு: யாருக்கு எவ்வளவு கிடைக்கும் என தெரியுமா?

4 சதவீத அகவிலைப்படி உயர்வு: யாருக்கு எவ்வளவு கிடைக்கும் என தெரியுமா?

தமிழக அரசின் நிதித்துறை செயலாளர்  உதயசந்திரன் 

அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை இனி பார்க்கலாம்.

திடீரென அரசு ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் தந்திருக்கிறது தமிழக அரசு. அறிவிக்கப்பட்டுள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வு யார் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டு விட்டது.

நேற்றைய தினம் தமிழக அரசு ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில், "தற்போது 38 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2024 முதல் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டு வழங்கப்படும்.

இதனால் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள். அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலம் கருதி இந்தக் கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். தமிழக அரசு: மேலும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து எதிர்வரும் காலங்களிலும் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை செயல்படுத்திடும்" என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 4 சதவீத அகவிலைப்படி உயர்வு யார் யாருக்கு கிடைக்கும் என்பது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதித்துறை முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக அரசு பணியாளர்களுக்கு 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக அகவிலைப்படியை 1-1-2024 முதல் உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில், அகவிலைப்படியை 4 சதவீதம் கூடுதல் உயர்வளித்து அரசு ஆணையிடுகிறது. இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் வரையிலான அகவிலைப்படி நிலுவை தொகையை தற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறை, மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்பட வேண்டும். திருத்தப்பட்ட அகவிலைப்படியை கணக்கிடும்போது, 50 காசு அல்லது அதற்கு மேல் இருக்கும்போது அதை ஒரு ரூபாயாக கணக்கிட வேண்டும். இந்த திருத்தப்பட்ட அகவிலைப்படி, தற்போது அகவிலைப்படி பெறும் முழு நேர பணியாளர்களுக்கும், சில்லறை செலவு நிதியில் இருந்து நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர ஊதியம் பெறும் முழு நேர அலுவலர்களுக்கும் அனுமதிக்கத்தக்கதாகும். பகுதி நேர பணியாளர்களுக்கு அனுமதிக்கத்தக்கதல்ல.

இந்த அகவிலைப்படி, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்களுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத்திந்திய தொழில்நுட்ப கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கு பொருந்தும். அதேபோல, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்தொழில் நுட்ப பயிற்சி பள்ளிகள், சிறப்பு பட்டயப்படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், உடற்பயிற்சி இயக்குனர்கள், நூலகர்கள் ஆகியோருக்கும், ஊதிய அட்டவணையில் உள்ள சிறப்பு காலமுறை ஊதிய நிலைகளில் ஊதியம் பெறும் வருவாய் துறையில் உள்ள கிராம உதவியாளர்களுக்கும் பொருந்தும்.சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள், எழுத்தர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags

Next Story