13 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய முதல்வர் ஸ்டாலின் முடிவு

13 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய முதல்வர் ஸ்டாலின் முடிவு
X
தேர்தல் வெற்றியால் பூரிப்பில் உள்ள திமுக பட்ஜெட்டின்போது மேலும் முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வெற்றியால் பூரிப்பில் உள்ள திமுக பட்ஜெட்டின்போது முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதில் ஒன்று அனைவரும் எதிர்பார்க்கும் ரூ.1000 உரிமைத்தொகை. இந்த தொகையை திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல் தரவில்லை என எதிர்க்கட்சிகள் வாதம் செய்கின்றன.

ஆனால் திமுக அரசோ 5 ஆண்டு கால ஆட்சியின் செயல் வடிவமே திமுக தேர்தல் அறிக்கை. அதனால் இன்னும் 4 ஆண்டுகளில் ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படும் என்கிறார்கள். இந்த நிலையில் ரூ.1000 உரிமை தொகை வரும் தமிழக பட்ஜெட்டின்போது 110 விதியின் கீழ் முதல்வர் வெளியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

அதேபோல் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மற்றொரு புதிய அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என தெரிகிறது. தேர்தல் முடிந்தவுடன் இரு தினங்களில் முக்கிய அறிவிப்பு என செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில் திமுகவின் தேர்தல் அறிக்கையான கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி சலுகையை அனைவருக்கும் கொடுக்க முதல்வர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைகளை வைத்து கடன் வாங்கியவர்களின் எண்ணிக்கை 48 லட்சமாகும். அதில் 35 லட்சம் பேர் நகைக் கடன்கள் பெற தகுதியற்றவர்கள் என கூட்டுறவுத் துறை தெரிவித்திருந்தது. மீதமுள்ள 13 லட்சம் பேருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைகள் திரும்ப கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் 40 கிராமுக்கு மேல் வைத்தவர்களுக்கு தள்ளுபடி சலுகை கிடையாது. ஆதார் எண்ணை தவறாக கொடுத்தவர்கள், குடும்ப அட்டையை கொடுக்க தவறியவர்கள் ஆகியோருக்கும் தள்ளுபடி கிடையாது. வெள்ளை நிற குடும்ப அட்டை வைத்திருந்தவர்கள் மற்றும் உரிய காலத்தில் நகைக் கடன் திருப்பி செலுத்தியவர்களுக்கு இந்த சலுகை இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மீதமுள்ள 13 லட்சம் பேருக்கும் நகைக் கடன்களை தள்ளுபடி செய்ய முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான அறிவிப்பை வரும் பட்ஜெட்டின் போது 110 இன் கீழ் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை கொடுக்குமாறு வலியுறுத்த இன்றைய தினம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சென்றுள்ளார். எனவே இந்த நிதி கிடைக்கப்பெற்றால் ரூ.1000 உரிமை தொகையும் 13 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடியும் அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!