மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வருகிற 31ம் தேதி கடைசி நாள்
அமைச்சர் செந்தில் பாலாஜி.
நமது நாட்டில் ஆதார் அடையாள அட்டை மிக முக்கியமான ஒரு ஆவணமாக மாறி வருகிறது. இதுவரை வங்கி கணக்கு எண், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் ஆதார் எண் இணைக்கப்படவேண்டும் என இருந்த நிலையின்அடுத்த கட்டமாக தற்போது மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
இந்த உத்தரவின் அடிப்படையில் ஒவ்வொரு மின் நுகர்வோரும் தங்களது வீடு கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் உள்ள மின் வினியோக இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை செய்து வருகிறார்கள். ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்க வில்லை என்றாலும் மின்சார கட்டணம் செலுத்துவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் கால அவகாசத்தை நீட்டிக்கவேண்டும் என்ற கோரிக்கை பரவலாக வைக்கப்பட்டு இருந்தது.
ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மின் நுகர்வோர் தங்களது பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருந்தாலும், ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் எனவும் மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு கால அவகாசம் நீட்டிப்பு வழங்கப்பட்டு இருப்பதாக தமிழக மின் வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார். இது குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 2.66 கோடி மின் நுகர்வோரில் இன்று காலை 11 மணி நிலவரப்படி இதுவரை 1.03 கோடி பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். சென்னையில் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. தேவைக்கேற்ப கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். தமிழகம் முழுவதும் உள்ள 2,811 பிரிவு அலுவலகங்களில் வரும் 31-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu