மருத்துவமனைகளில் 30 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன. அமைச்சர் பேட்டி
கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் மருத்துவமனைகளில் 30 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் 250 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் தற்போது காலியாக உள்ளன. தமிழகத்தில் கடந்த காலங்களில் நாளொன்றுக்கு மருத்துவமனைகளில் பயன்படுத்த 230 டன் ஆக்சிஜன் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தற்போது 500 டன் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. தற்போது தமிழகத்தில் 660 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கையிருப்பில் உள்ளது. ஆக்சிஜன் தேவை தமிழகத்தில் தன்னிறைவு பெற்றுள்ளது.
டாக்டர்கள் மற்றும் அதிகாரிகளின் அயராத உழைப்பால் கொரோனா பரவல் குறைந்துள்ளது. செங்கல்பட்டில் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் அனுமதி வரும் என்று எதிர்பார்க்கிறோம். அனுமதி வந்தவுடன் தடுப்பூசிகள் தயாரிக்கும் பணி தொடங்கப்படும்.
இதுவரை தமிழகத்திற்கு 1 கோடியே ஒரு லட்சம் தடுப்பூசிகள் வரப் பெற்றுள்ளது. அதில் 93 லட்சத்து 75 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் தற்போது 1,845 தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் 61 மருத்துவமனைகளில் சித்தா, யோகா, யுனானி உள்ளிட்ட மருத்துவ சேவைகள் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்திய மருத்துவத்தின் தாய் வீடாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. வைரஸ் தொற்று தமிழகத்தில் குறைந்து வருகிறது. நோயை கண்டு யாரும் அச்சமடைய வேண்டாம்.
வேலூர் மாவட்டத்தில் 83 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 673 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சை அளிக்க 1,790 மருந்து குப்பிகள் வந்துள்ளன. இவைகள் போதுமானதாக இல்லாத காரணத்தால், தமிழகத்திற்கு மேலும் 30 ஆயிரம் மருந்து குப்பிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்
வேலூர் மாவட்டத்தில் உள்ள சுமார் 15 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் தொகையில், 7 லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து தமிழகத்திலேயே முதல் மாவட்டமாக, வேலூர் மாவட்டம் திகழ்ந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu