தி.மு.க.விற்கு தாவ துடிக்கும் 3 எம்.எல்.ஏ.க்கள்: அதிர்ச்சியில் எடப்பாடி
எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க.விற்கு இது போதாத காலம் என்று தான் சொல்ல வேண்டும். ஆம்.. ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்த பிரச்சனையின் உச்சகட்டமாக கூட்டப்பட்ட பொதுக்குழுவில் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பன்னீர்செல்வம் உள்பட சில முக்கிய நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஓ. பன்னீர்செல்வம் சென்னை ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி நடத்தியது சட்ட விரோதமான பொதுக்குழு என கூறி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்துள்ளார். இரண்டு நீதியரசர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு 'ரிசர்வ்' செய்யப்பட்டுள்ளது.
தீர்ப்பு எப்பொழுது வரும் அது எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருக்குமா இல்லை பாதகமாக இருக்குமா என்ற கேள்வி அவருக்கு தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக உள்ளது. ஏனென்றால் இது அவருக்கு மட்டுமல்ல எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க. இந்த பேரியக்கத்திற்கு ஒரு சோதனையான காலகட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க சத்தம் இல்லாமல் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை திரட்டி எடப்பாடி பழனிசாமிக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறார்.கடந்த சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக இருந்த ஐயப்பன் எம்.எல்.ஏ. திடீரென ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தாவினார்.
அதுமட்டுமல்ல கடந்த வாரம் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் கொங்கு மண்டல சுற்று பயணத்தின் போது அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி உள்பட ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள் தி.மு.க.வில் ஐக்கியமானார்கள். ஆறுகுட்டி தி.மு.க.வில் ஐக்கியமானதும் எடப்பாடி பழனிசாமி ஆறு குட்டி போனதை பற்றி கவலை இல்லை. மற்ற குட்டிகள் எல்லாம் அ.தி.மு.க.வில் பாதுகாப்பாக இருக்கிறார்கள். யாரும் செல்ல மாட்டார்கள் என்றார் .
ஆனால் அவருக்கு ஷாக் அடிப்பது போல் ஒரு செய்தி கொங்கு மண்டலத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. கொங்குமண்டலத்தை சேர்ந்த 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.விற்கு தாவ போவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த மூன்று பேரும் ஒரு காலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் என்பது கூடுதல் தகவலாகும். தி.மு.க.வின் கொங்கு மண்டல பொறுப்பாளராக இருந்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஏற்பாட்டில் இந்த மூன்று எம்.எல்.ஏ.க்களும் விரைவில் தி.மு.க. முகாமிற்கு தாவ இருக்கிறார்கள்.
உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது இதே போல் தான் விஜயகாந்த் கட்சியை பலவீனப்படுத்தினார். விஜயகாந்தின் தே.மு.தி.க. கட்சியில் இருந்து சில எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக கடைசிவரை செயல்பட்டார்கள். இதனால் தே.மு.தி.க. அப்போது எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் அவர்கள் அ.தி.மு.க.வில் சேரவில்லை.
அதேபோன்ற ஒரு பாணியை தான் இவர்களும் பின்பற்ற இருக்கிறார்கள் எனவும் கூறப்பட்டு வருகிறது. எப்படியோ அ.தி.மு.க.விற்கு சோதனை காலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கட்சியில் யாருக்கு அதிகாரம் என தொடங்கிய போட்டி தி.மு.க.விற்கு தொடர்ந்து சாதகமாக போய்க்கொண்டிருப்பதாகவும் இது அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு பெரும் சரிவை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu