குற்ற நடவடிக்கைகளை தடுக்க 2 சிறப்பு வாகனங்கள்: முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரூ.40 இலட்சம் மதிப்பிலான 2 பல்நோக்கு பயன்பாட்டு விழிப்புணர்வு வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (6.12.2021) தலைமைச் செயலகத்தில், காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 40 இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஒளி, ஒலி கட்டமைப்புடன் கூடிய 2 பல்நோக்கு பயன்பாட்டு விழிப்புணர்வு வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
குழந்தைகள் மீதான பாலியல் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக, தமிழ்நாடு காவல் துறை அனைத்து தரப்பு பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 40 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான இரண்டு ஒளி, ஒலி கட்டமைப்பு, அகன்ற திரையுடன் கூடிய பல்நோக்கு பயன்பாட்டு விழிப்புணர்வு வாகனங்கள் காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டுள்ளது.
இவ்வாகனத்தின் நான்கு புறமும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகனத்தின் சுற்றுப்பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை காணவும், அதனைப் பதிவு செய்யவும், தேவைப்படின் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டும், பாதுகாப்பு பணியிலும் இவ்வாகனத்தை பயன்படுத்தும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இவ்வாகனம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ளுதல் மட்டுமன்றி, சூழ்நிலைகளுக்கு ஏற்ப அனைத்து சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகளுக்கும், அவசர காலங்களில் நடமாடும் கட்டுப்பாட்டு அறையாக செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு பணிகளை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில், ஒன்று சென்னை பெருநகர காவல் ஆணையருக்கும், மற்றொன்று சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குர் அவர்களின் கட்டுப்பாட்டிலும் செயல்படும்.
இந்த நிகழ்வின்போது, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu