தமிழகத்தில் ரூ.2500 கோடி முதலீடு: ஹபக் லாய்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழகத்தில் ரூ.2500 கோடி முதலீடு: ஹபக் லாய்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
X

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.2500 கோடி முதலீட்டில் ஹபக் லாய்டு நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக ஹபக் லாய்டு நிறுவனம் உள்ளது.

தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட, இந்நிறுவனத்துடன் 2500 கோடி ரூபாய் முதலீட்டில், 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருகிறார்.

தமிழ்நாட்டின் பரவலான தொழில் வளர்ச்சிக்கு சரக்கு போக்குவரத்தினை திறமையாகக் கையாளுவது மிகவும் அவசியமானதாகும். தமிழ்நாட்டில் உள்ள நான்கு துறைமுகங்களைப் பயன்படுத்தி, பெரும் சரக்குகளைக் கையாளும் கண்டெய்னர் துறைமுகங்கள், சரக்குப் போக்குவரத்து பூங்காக்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாட்டில் அமைத்திட பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகின்றது. இத்துறைக்கான தனிக்கொள்கை ஒன்றும் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

ஹபக் லாய்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

அந்த வகையில், சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக திகழக்கூடிய ஹபக் லாய்டு (Hapag-Lloyd) நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெஸ்பர் கன்ஸ்ட்ரப் மற்றும் இயக்குநர் ஆல்பர்ட் லோரெண்டே ஆகியோர் தமிழக முதல்வரை இன்று சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து முதல்வர் எடுத்துரைத்து, தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இக்கூட்டத்தில், 2500 கோடி ரூபாய் முதலீட்டில், தூத்துக்குடி மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தளவாட வசதிகள் அமைத்திட இந்நிறுவனம் முன்வந்துள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இம்முதலீடு 1000 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

தமிழ்நாட்டின் சாலைக் கட்டமைப்பில் முதலீடு செய்வது தொடர்பாக அபர்ட்டிஸ் நிறுவனத்தின் நிர்வாகியுடன் சந்திப்பு

அதனைத் தொடர்ந்து, சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான அபர்ட்டிஸ் நிறுவனத்தின் லாரா பெர்ஜானோ, சர்வதேச மற்றும் நிறுவன உறவுகளின் தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின்போது, இந்தியாவிலேயே அதிகமான சாலை அடர்த்தியும், தரமான சாலை கட்டமைப்பும் தமிழ்நாட்டில் உள்ளன என்பதையும், தொழில்வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த சாலை கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தி, அபர்ட்டிஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் சாலைக் கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். தமிழ்நாட்டின் மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ளவும் அபர்ட்டிஸ் நிறுவனம் ஆர்வம் தெரிவித்துள்ளது.

இச்சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, 'Guidance' நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் விஷ்ணு ஆகியோர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!