அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
X

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் 

பாஜக உடனான கூட்டணி முறிந்த பின்னர் நடந்த முதல் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட கட்சி அதிமுக. உயிரோட்டம் உள்ள அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. தமிழ்நாட்டில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி அதிமுக.

எதிரிகள் அஞ்சும் அளவுக்கு மதுரை மாநாட்டை நடத்தினோம். அதிமுக மாநாட்டால் மதுரை நகரமே குலுங்கியது. மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் 15 லட்சம் பேர் பங்கேற்றனர்.

அளவு கடந்த சோதனை மற்றும் வெற்றியை பார்த்தது அதிமுகதான். எதிரிகளை சட்ட நுணுக்கத்தோடு கையாள வேண்டும். கைகோர்த்து செயல்பட்ட எதிரிகள், துரோகிகளை அதிமுக வென்று காட்டியது. அதிமுக இனி ஜெட் வேகத்தில் செயல்படும்.

திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துவிட்டது. திமுக ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. போதைப்பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த திமுக அரசு தவறி விட்டது. திமுக அரசின் இறங்கு முகம் தொடங்கிவிட்டது. 520 தேர்தல் வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றவில்லை. நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு பின்னும் அமைச்சரை பதவி நீக்கம் செய்யாதது சரியில்லை.

அடுத்து எந்த தேர்தல் வந்தாலும் அதிமுகதான் வெற்றி பெறும். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் 30 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தது அதிமுகதான்.

மழை நீரில் மூழ்கிய பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா உணவங்கள் மூடப்படுகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் தான் தென்மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சென்று பார்க்காமல் டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டத்திற்கு ஸ்டாலின் சென்றார்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளது. பல்வேறு கருத்து வேறுபாடுகளுடன் இந்தியா கூட்டணி உள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

பாஜக உடனான கூட்டணி முறிந்த பின்னர் நடந்த முதல் பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்தோ அல்லது பாஜகவுடனான கூட்டணி முறிவு குறித்தோ எந்த அம்சங்களும் இடம்பெறவில்லை.

திமுக அரசைக் கண்டித்து 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்காமல் மீனவர்களை வஞ்சிப்பது, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்காமல் விவசாயிகளை வஞ்சிப்பது என திமுக அரசை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதேபோன்று மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வெள்ள நிவாரண உதவி வழங்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவையில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக அமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்த கோரியும், ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டியும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!