தமிழக காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

தமிழக காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்
X

ஜிஎம் ஈஸ்வர ராவ், தாம்பரம் நகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக், டிஜிபி கே.வன்னிய பெருமாள்

https://www.dtnext.in/news/tamilnadu/i-day-2024-presidents-medal-for-tambaram-salem-police-commissioners-21-others-799581

தமிழகத்தை சேர்ந்த 23 அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக குடிமைப் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படையின் தலைமை இயக்குநர் வன்னியப்பெருமாள், தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக், தென் சென்னை கூடுதல் ஆணையர் என். கண்ணன் உள்பட தமிழகத்தை சேர்ந்த 23 அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பதக்கம் பெறுவோரின் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

மத்திய, மாநில காவல் துறை, தீயணைப்புத் துறை, சிறைத் துறைகளில் சிறப்பாக சேவையாற்றி வரும் காவலர்கள், அலுவலர்களுக்கும் காவல் பணியில் உயிர்நீத்தவர்களை கௌரவிக்கும் வகையிலும் குடியரசுத் தலைவரின் தீரச்செயலுக்ககான பதக்கம், வீரச்செயல் பதக்கம், தகைசால் பதக்கம், மெச்சத்தக்க பணிக்கான பதக்கம் ஆகிய நான்கு பிரிவுகளில் இந்தப் பதக்கங்கள் ஆண்டுக்கு இருமுறை குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தன்று வழங்கப்படுகின்றன.

அந்த வகையில் இந்த ஆண்டு தமிழக காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படையில் பணியாற்றும் சுதந்திர தின பதக்கம் பெறுவோரின் விவரம் வருமாறு:

தகைசால் பணிக்கான பதக்கம்: தமிழக குடிமைப் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படைத் தலைமை இயக்குநர் கே. வன்னியப்பெருமாள், தாம்பரம் காவல் ஆணையரும் கூடுதல் தலைமை இயக்குநருமான அபின் தினேஷ் மோதக்.

மெச்சத்தக்க பணிக்கான பதக்கம்: ஐ.ஜி.க்கள் டாக்டர். என். கண்ணன் (கூடுதல் காவல் ஆணையர், தெற்கு மண்டல சென்னை காவல்துறை); ஏ.ஜி. பாபு (தொழில்நுட்பப்பிரிவு, சென்னை); சேலம் காவல் ஆணையர் பிரவீன் குமார், எஸ்.பி.க்கள் கா.ஃபெரோஸ்கான் அப்துல்லா (கரூர் மாவட்டம்), து.பெ. சுரேஷ் குமார் (உயர் பயிற்சியகம், சென்னை), மா. கிங்ஸ்லின் (பொருளாதார குற்றப்பிரிவு, சென்னை), வி. சியாமளா தேவி (மதுவிலக்கு அமலாக்கம், சென்னை), முனைவர். கே. பிரபாகர் (திருவண்ணாமலை மாவட்டம்), டாக்டர் பாலாஜி சரவணன் (குடிமைப்பொருள் வழங்கல்-குற்றப்புலனாய்வு), கூடுதல் எஸ்.பி.க்கள் க. ராதாகிருஷ்ணன் (காவல் பயிற்சிப்பள்ளி, வேலூர்), எம். ஸ்டீஃபன் (அதிதீவிரப்படை, சென்னை), டிஎஸ்பிக்கள் எல். தில்லிபாபு (பொருளாதார குற்றப்பிரிவு, தலைமையிடம் - சென்னை), ரெ. மனோகரன் (சிறப்புலனாய்வுப்பிரிவு, நெல்லை), செ. சங்கு (உயர் பயிற்சியகம், சென்னை), ஆய்வாளர்கள் பி. சந்திரசேகர் (பாதுகாப்பு-குற்றப் புலனாய்வுத் துறை, சென்னை), பி. சந்திரமோகன் (க்யூ பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, கோவை), எம். ஹரிபாபு (தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை), ஆர். தமிழ்செல்வி (குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, திருவாரூர்), சிறப்பு உதவி ஆய்வாளர்கள் து.கி. முரளி (நுண்ணறிவுப்பிரிவு, சென்னை), ந. ரவிச்சந்திரன் (ஊழல் தடுப்புத்துறை, தலைமையிடம், சென்னை), ஜி. முரளிதரன் (தனிப்பிரிவு குற்றப்புலனாய்வு, தாம்பரம்).

ஊர்க்காவல் படை: மேலும், குடிமைப்பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படையில் தமிழகத்தில் பணியாற்றும் எம். மூர்த்தி, கம்பெனி கமாண்டர், எஸ். கலையழகன், பிளாட்டூன் கமாண்டர் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க பணிக்கான பதக்கம் பெறும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

1,037 பேருக்கு காவல் பதக்கம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு, மத்திய காவல் படைகள், மாநில காவல்துறை, சிபிஐ, தீயணைப்புத் துறை, ஊர்க்காவல் படை உள்ளிட்டவற்றைச் சேர்ந்த மொத்தம் 1,037 பேருக்கு வீர தீர செயல்களுக்கான குடியரசுத் தலைவரின் பதக்கம் புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

வீர தீர செயலுக்கான குடியரசுத் தலைவரின் உயரிய பதக்கம், தெலங்கானா காவல் துறையின் தலைமைக் காவலர் சதுவு யாதையாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கிலி பறிப்பு கொள்ளையர்கள் பலமுறை கத்தியால் குத்தியபோதும், அவர்களை விடாமல் துணிச்சலுடன் பிடித்ததற்காக யாதையாவுக்கு இப்பதக்கம் வழங்கப்படுகிறது.

வீர தீர செயலுக்கான பதக்கம் 213 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தலைசிறந்த சேவைக்காக 94 பேருக்கும், பாராட்டத்தக்க சேவைக்காக 729 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி சக்ரா, சௌரிய சக்ரா விருதுகள்: ஆயுதப் படையினருக்கான கீர்த்தி சக்ரா, சௌரிய சக்ரா உள்ளிட்ட வீரதீர விருதுகள் 103 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படைப் பிரிவைச் சேர்ந்த கர்னல் மன்பிரீத் சிங், மேஜர் ராமகோபால் நாயுடு, ரவிக்குமார், ஹிமாயுன் முஸ்ஸாமில் பட் ஆகிய நால்வருக்கு கீர்த்தி சக்ரா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் வீரமரணமடைந்தவர் மன்பிரீத் சிங் ஆவார். சௌரிய சக்ரா விருது 18 பேருக்கும், சேனா பதக்கம் 63 பேருக்கும், நவோ சேனா பதக்கம் 11 பேருக்கும், வாயு சேனா பதக்கம் 6 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!