16 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தலா ரூ.2 கோடி மானியம்

16 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தலா ரூ.2 கோடி மானியம்
X

பைல் படம்.

சிறப்பான அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் செயல்பாட்டினைக் கருத்தில் கொண்டு 16 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்க ஒன்றிய அரசு ரூ.32 கோடி மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கும், மகளிர்களுக்கும் தொழிற்பயிற்சி அளித்து வேலைவாய்ப்பினை பெருக்கிட தமிழ்நாடு அரசால் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் 44 இடங்களில் ஆண்களுக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 11 இடங்களில் மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் உள்ளன.

ஆண்டுதோறும் பயிற்சி காலம் ஆகஸ்ட் மாதம் முதல் நாள் தொடங்குகிறது. பயிற்சிக்கு அழைப்பு அட்டையின் பேரில் வருகை தரும் நபர்கள் மதிப்பெண் மற்றும் இனச் சுழற்சி ஒதுக்கீட்டின் அடிப்படையில் பயிற்சிக்கு சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். பயிற்சியாளரின் பெற்றோர் ஆண்டு வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு மாத உதவித் தொகை வழங்கப்படும்.

பயிற்சியாளர்களின் மொத்த இருக்கையில் 33 1/3 சதவிகிதத்திற்கு 50 ரூபாய் வீதமும், தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 150 ரூபாய் வீதமும், பழங்குடியினருக்கு 175 ரூபாய் வீதமும், மியான்மர் (பர்மா), இலங்கை, வியட்நாம் அகதிகளுக்கு 175 ரூபாய் வீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர் மரபினருக்கு 140 ரூபாய் வீதமும் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் சிறப்பான அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களின் செயல்பாட்டினைக் கருத்தில் கொண்டு 16 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்க ஒன்றிய அரசு ரூ.32 கோடி மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது திறன்படைத்த மனித வளத்தை உருவாக்கி, தொழில் நிறுவனங்களின் தேவையினை பூர்த்தி செய்வததையும், அதிக அளவிலான சுயதொழில் தொடங்கும் திறமையினை பயிற்சியாளர்களுக்கு அளிப்பதையும் நோக்கமாக கொண்டு செயலாற்றி வருகிறது. இதன்மூலம், பயிற்சியாளர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கும். இத்தகைய தொழில்திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்கிட புதிய அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி மாநிலத்தில் 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறம்பட செயல்பட்டு வருகின்றன.

மேலும், வரலாறு காணாத அளவில் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான சேர்க்கையில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் முதன்முறையாக 93.79% பயிற்சியாளர்கள் சேர்க்கை செய்யப்பட்டுள்ளனர். இதைத்தவிர, இவ்வாண்டில் நடைபெற்ற அகில இந்திய தொழிற்தேர்வில் 91% பயிற்சியாளர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 74% பயிற்சியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பது மிகுந்த பெருமைக்குரியதாகும்.

ஒன்றிய அரசானது தொழிற்பயிற்சி நிலையங்களின் ஒட்டுமொத்த செயல்திறனை மேம்படுத்துவதற்காக தொழிற் துறை மதிப்பு விரிவாக்கத்திற்காக திறனை மேம்படுத்தும் திட்டமானது (Skill Strengthening for Industrial Value Enhancement- STRIVE) உலக வங்கி உதவியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 13 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள், 3 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் என ரூ.29.01 கோடி தொகை மானியம் ஒப்பளித்துள்ளது.

தற்போது ஒன்றிய அரசானது தமிழ்நாட்டில் அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களும் சிறப்பாக செயல்படுவதினை கருத்தில் கொண்டு மேலும் 16 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தலா ரூ.2.00 கோடி வீதம் மொத்தம் ரூ.32.00 கோடி மானியம் வழங்குவதற்கான ஆணையினை பிறப்பித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!