தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்காக 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்.
தீபாவளி பண்டிகை அக்டோபர் 24ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் கொண்டாடப்பட இருக்கிறது. பொதுவாக தீபாவளி பண்டிகையின் போது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். எந்த ஊரில் பணியாற்றினாலும் பஸ் அல்லது ரயில் மூலம் சொந்த ஊரில் சென்று கொண்டாடுவதை தமிழக மக்கள் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு ரயிலில் செல்வதற்கான முன்பதிவுகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டதால் அனைத்து ரயில்களிலும் முன்பதிவு வசதிகள் நிறைவு பெற்றுவிட்டன.
தமிழகத்தை பொறுத்தவரை தலைநகர் சென்னையில் தான் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ள தொழிலாளர்கள், அதிகாரிகள் ,அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், ஐ.டி. ஊழியர்கள் என ஏராளமாக உள்ளனர். அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 13 நாட்களே இடையில் உள்ளதால் மக்கள் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதற்கு வசதியாக தமிழக அரசு சிறப்பு பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது.
இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் இன்று சென்னையில் அனைத்து மண்டல போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:-
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை மக்கள் தங்களது சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு வசதியாக இந்த ஆண்டு 16 ஆயிரத்து 888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் தீபாவளிக்கு முன்னதாக அதாவது அக்டோபர் 21,22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு மற்றும் தாம்பரம் ஆகிய இடங்களில் இதற்கான முன்பதிவு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்காக இதுவரை 38 ஆயிரம் பேர் அரசு போக்குவரத்து கழக பஸ்களில் முன்பதிவு செய்து இருக்கிறார்கள்.இதேபோல தீபாவளி முடிந்து ஊருக்கு திரும்புவதற்கு வசதியாக 13 ஆயிரத்து 152 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. இந்த பஸ்கள் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை இயக்கப்படும். சென்னையில் கோயம்பேடு தவிர மாதவரம் கே.கே. நகர், தாம்பரம், பூவிருந்தவல்லி ஆகிய இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் புறப்படும். எல்லா இடங்களிலிருந்தும் கோயம்பேடு பஸ் நிலையத்தை அடைவதற்கு 24 மணி நேர டவுன் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் மட்டும் தீபாவளி பண்டிகையை ஒட்டி முன்பதிவு செய்வதற்கு 10 டிக்கெட் கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.ஆன் லைன் மூலமும் டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக சேர்த்து மொத்தம் 4218 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் செய்வதற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் வெளியிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu