16 லட்சம் விவசாயிகளின் நகைக் கடன்கள் தள்ளுபடி: அரசாணை வெளியீடு
கூட்டுறவு வங்கிகளில் கடந்த 31.03.2021 வரை 5 சவரன்களுக்கு உட்பட்டு வாங்கிய விவசாயிகளின் நகைக் கடன்களை தமிழக அரசு ரத்து செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில், நகைக் கடன்கள் தள்ளுபடி என்பது ஒரு குடும்பத்திற்கு 5 பவுனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை சில தகுதிகளின் கீழ் உண்மையான ஏழை எளிய மக்கள் பயன் பெறும் வகையில் தள்ளுபடி செய்யப்படும்.
தகுதியுள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்காக அரசுக்கு ஏற்படும் செலவு, பூர்வாங்க மதிப்பீடுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் ரூ. 6ஆயிரம் கோடி. இதற்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு தேவையான உதவிகளைச் செய்யும்.
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கருத்துருவின் அடிப்படையில், கூட்டுறவு நிறுவனங்களில் குடும்ப அட்டையின்படி ஒரு குடும்பத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி வரை 5 பவுனுக்கு உட்பட்டு (மொத்த எடை 40 கிராமுக்கு உட்பட்டு) விவசாயிகள் வாங்கிய பொது நகைக் கடன்கள் வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு தள்ளுபடி செய்து அரசு ஆணையிடுகிறது.
இதுகுறித்து அனைத்து கூட்டுறவுச் சங்கங்களுக்கும் அறிவுரை வழங்கும்படி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்களக்கு தெரிவிக்கப்படுகறிது. நகைக் கடன் தள்ளுபடி தொடர்பான பட்டியலில் கண்டுள்ள நகைக்கடன்களை, அயல் மாவட்ட கூட்டுறவு தணிக்கை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்யப்படவேண்டும். மேலும், அப்பட்டமான நகைக் கடன் மோசடியில் ஈடுபட்ட அனைத்து நபர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்படுவதன் மூலமாக தமிழகத்தில் சுமார் 16 லட்சம் நகைக் கடன்தாரர்கள் பயன் பெறுவார்கள்.
கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்படும் நகைக்கடன்கள் அனைத்தும் சங்கத்தின் சொந்த நிதியிலிருந்து, அதாவது, பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட வைப்பு தொகையிலிருந்து வழங்கப்பட்டுள்ளதால், தள்ளுபடியில் உள்ள அசல் தொகை மற்றும் 01.04.2021-ஆம் நாள் முதல் இவ்வரசாணை பிறப்பிக்கப்படும் நாள் வரை அதற்குரிய வட்டியினை அரசு ஏற்றுக் கொண்டு கூட்டுறவு நிறுவனங்களுக்கு தள்ளுபடித் தொகையினை அரசு வழங்கும்.
இவ்வரசாணையின் இணைப்பில் உள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தேவைக்கேற்ப கூடுதலாக நெறிமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்கு அதிகாரமளிக்கப்படுகிறது.
மேற்கண்டவாறு தள்ளுபடி செய்யப்பட்ட பொது நகைக் கடன் தொகையினை அளவீடு (Quantification) மற்றும் செலவீடு (Reimbursement) செய்து உரிய குறிப்பான ஆணைகள் வெளியிட ஏதுவாக, உரிய கருத்துருவினை அரசுக்கு அனுப்பி வைக்குமாறு கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரை கேட்டுக் கொண்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu