தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக 136 பேர் ஒரே நாளில் கைது
டிஜிபி., சைலேந்திர பாபு. - கோப்புப்படம்
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 9 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராய விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விஷ சாராயத்தை கண்டுபிடித்து ஒழிப்பதற்கு சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். விஷ சாராய வேட்டையில் ஈடுபட மாவட்ட எஸ்பி, ஆணையர், மதுவிலக்கு காவல்துறையினருக்கு டிஜிபி ஆணையிட்டுள்ளார்.
மேலும், ஆலை, மருத்துவமனை, ஆய்வகத்தில் உள்ள மெத்தனாலை பயன்படுத்தி விஷ சாராயம் தயாரிப்பா என கண்டறிய அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 136 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 199 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் சாராய வியாபாரிகள் 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 226 லிட்டர் சாராயம் மற்றும் 517 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 57 சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 109 லிட்டர் சாராயம், 450 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் 47 பேர் கைது செய்யப்பட்டு, 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, கள்ளக்குறிச்சியில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டதுடன், 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஷ சாராயத்தை கண்டுபிடித்து ஒழிப்பதற்கு சிறப்பு தேடுதல் வேட்டை நடத்த டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu