அமைப்புசாரா தொழிலாளர்கள் 50,721 பேருக்கு ரூ.12.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

அமைப்புசாரா தொழிலாளர்கள் 50,721 பேருக்கு ரூ.12.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
X
அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் 50,721 உறுப்பினர்களுக்கு ரூ.12.35 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (1.12.2021) தலைமைச் செயலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 21 கோடியே 63 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், பணிமனைக் கட்டடங்கள் மற்றும் விடுதிக் கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற 50,721 உறுப்பினர்களுக்கு 12 கோடியே 35 இலட்சத்து 20 ஆயிரத்து 950 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தமிழ்நாட்டில் திறன்மிக்க தொழிலாளர்களின் தேவை மற்றும் வழங்கலுக்கு இடையேயான இடைவெளியை குறைக்கும் வகையில் தற்போது 90 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிற்பயிற்சி நிலையங்கள் பல்வேறு தொழிற்பிரிவுகளில் நீண்டகால திறன் பயிற்சியினை மாணவர்களுக்கு வழங்குவதன் மூலம் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும், தொழில் நுட்பத்திற்கும் ஏற்றவாறு திறன் பெற்ற பொறியாளர்களை உருவாக்குகின்றன. இதன்மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கிறது. இத்தகைய தொழில் திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்கிட புதிய அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் போன்ற திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து நெய்வேலியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 3 கோடியே 84 இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் பணிமனைக் கட்டடங்கள்; நாகப்பட்டினம் மாவட்டம், செம்போடை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து 8 கோடியே 18 இலட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், பணிமனைக் கட்டடங்கள் மற்றும் விடுதிக் கட்டடங்கள் ; திருச்சிராப்பள்ளி மாவட்டம் - புள்ளம்பாடி, அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையம், சிவகங்கை மாவட்டம் - சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் 9 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மூன்று விடுதிக் கட்டடங்கள், என் மொத்தம் 21 கோடியே 63 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்கள்.

தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண்கண்ணாடிகளுக்கான உதவித்தொகை, மாதாந்திர ஓய்வூதியத் தொகை, இயற்கை மற்றும் விபத்து மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 31,428 பயனாளிகளுக்கு ரூ.6,35,64,950/-, மாதாந்திர ஓய்வூதிய உதவித்தொகையாக 17,338 பயனாளிகளுக்கு ரூ.1,78,98,000/-, இயற்கை மரணம் மற்றும் ஈமச் சடங்கு உதவித்தொகையாக 1659 பயனாளிகளுக்கு ரூ.3,92,31,500/-, திருமண உதவித்தொகை, கண்கண்ணாடி உதவித்தொகை, விபத்து மரண உதவித்தொகை, குடும்ப ஓய்வூதிய உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை என மொத்தம் 50,721 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 12 கோடியே 35 இலட்சத்து 20 ஆயிரத்து 950 ரூபாய்க்கான நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கிடும் அடையாளமாக 7 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் தலைவர் பொன்குமார், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் ஆர். கிர்லோஷ்குமார், இ.ஆ.ப., வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் கொ.வீர ராகவ ராவ், இ.ஆ.ப., தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தின் சட்ட ஆலோசகர் வீ.கண்ண தாசன், என்.எல்.சி. இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலண்மை இயக்குநர் ராகேஷ் குமார், பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் (நிதி) வி.ஆர். கே.குப்தா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!