சென்னை வந்த ஓமன் விமானத்தில் 60 பயணிகளிடம் தங்கம் பறிமுதல்
காட்சி படம்
சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஓமன் நாட்டு தலைநகர் மஸ்கட்டில் இருந்து 186 பயணிகள் பயணிகளுடன் விமானம் வந்தது. அந்த விமானத்தில் சுமார் 100 பேருக்கு மேல் தங்கம் கடத்தி வருவதாக சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனால் சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த சந்தேகத்துக்கிடமான சென்னை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 110-க்கும் மேற்பட்ட பயணிகளை வெளியில் செல்ல விடாமல் விமான நிலைய சுங்க இலாகா அலுவலகத்துக்குள் தனி அறைக்கு அழைத்துச்சென்று ஒவ்வொருவராக முழுமையாக சோதனை செய்தனர்.
அவர்களின் சூட்கேஸ் மற்றும் பைகளை சோதனை செய்ததில், பல ரகசிய பெட்டிகளில் 13 கிலோ தங்கம், 120 ஐபோன்கள், 84 ஆண்ட்ராய்டு போன்கள், வெளிநாட்டு சிகரெட், லேப்டாப்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 4 மணி வரை நீடித்தது. சுங்க இலாகா அதிகாரிகள் பிடித்து வைத்திருக்கும் 100-க்கும் மேற்பட்டவர்களில் 60-க்கும் மேற்பட்ட தங்கம் கடத்தும் 'குருவி'கள் இருப்பதும், மீதம் உள்ளவர்களில் 40-க்கும் மேற்பட்டவர்கள் அப்பாவி பயணிகள் எனவும் தெரியவந்தது.
இவர்களிடம் மஸ்கட்டில் இருந்து விமானத்தில் ஏறும் போது குருவிகள் அன்பளிப்பாக செண்ட், சாக்லெட்டுகள் கொடுத்து அவற்றுடன் தங்கம், ஐபோன்களையும் கொடுத்து அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்தது. பயணிகளில் ஒருவர், விமானத்தில் இருந்த சக பயணி ஒருவரால், சென்னை விமான நிலையத்தில் போனை திருப்பி கொடுத்ததும், கமிஷன், சாக்லேட் மற்றும் இன்னபிற பொருட்கள் தருவதாக கூறி, போனை தங்களுக்கு கொடுத்ததாக ஒப்புக்கொண்டார்.
சோதனை முடிந்ததும் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. இதையடுத்து 40-க்கும் மேற்பட்டவர்களை சுங்க இலாகா அதிகாரிகள் எச்சரித்து எழுதி வாங்கி கொண்டு அனுப்பினர். 60-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து தங்கம், ஐபோன்கள் உள்பட மின்சாதன பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
இவற்றுக்கு அபராதம் விதித்து இருப்பதாகவும், அபராத தொகை செலுத்தி விட்டு செல்லவும், மீண்டும் கடத்தலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.14 கோடிக்கு மேல். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் 113 பேர் மீது சுங்கச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தனர்.
ஒரே விமானத்தில் வந்த 60-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து தங்கம், ஐபோன்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விமானத்தில் வந்த சக பயணிகளிடம் தாங்கள் கொண்டு வந்த கடத்தல் பொருட்களை கொடுத்து கடத்தி வந்ததும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu