தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை கண்டுபிடிக்க வீடு வீடாக ஆய்வு

தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை கண்டுபிடிக்க வீடு வீடாக ஆய்வு
X
அடுத்த கொரோனா அலையை தடுக்க 100 % இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறினர்

கொரோனா தொற்றை தடுப்பதற்காக கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன்பிறகு அவர்களுடன் சேர்ந்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

பின்னர் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அவர்களுக்கு கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட்டன.

இந்த நிலையில் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அனைவருக்கும் விரைந்து தடுப்பூசி போடவும் தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சனிக்கிழமை தோறும் இந்த முகாம் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 5 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 கோடியே 32 லட்சத்து 99 ஆயிரத்து 355 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் 50 லட்சத்து 99 ஆயிரத்து 904 பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசியை கூட போடாமல் உள்ளனர். தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அவர்கள் அலட்சியம் காரணமாக இன்னும் தடுப்பூசி போடவில்லை. மேலும் மீதமுள்ளவர்களிடம் தடுப்பூசி போடும் ஆர்வம் குறைந்துள்ளதால் அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.

எனவே தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடாத 50 லட்சத்து 99 ஆயிரத்து 904 பேரையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு தடுப்பூசி போடும் முயற்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தமிழகத்தில் 12 வயது முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தற்போது தான் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விரைந்து தடுப்பூசி போடப்படும். அதே நேரத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி போடாதவர்களை அடையாளம் கண்டு முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. அவர்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. இதற்காக வீடு வீடாக சென்று விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக தடுப்பூசி போடாதவர்களை அடையாளம் காணும் பணியில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட உள்ளனர். அடுத்து வரும் கொரோனா அலையை தடுக்க வேண்டும் என்றால் 100 சதவீதம் பேரும் 2 தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தி இருக்க வேண்டும். 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டால் கொரோனா அலையை கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை என்று கூறினார்கள்.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil