மணல் கொள்ளையில் அமலாக்க துறையிடம் சிக்கிய 10 மாவட்ட ஆட்சியர்கள்
மணல் குவாரி (கோப்பு படம்)
தமிழகத்தில் மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளை தொடர்ந்து 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காவிரி, கொள்ளிடம் மற்றும் பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் மணல் அள்ளப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொதுப்பணித்துறை மூலமாக மணல் விற்பனை நடைபெற்றாலும் அதனை காண்டிராக்டு எடுத்து நடத்தும் தனியார் நிறுவனங்கள் தான் இதில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது மணல் விற்பனையில் சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி நிறைய கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன. ஆனால் தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மணல் விற்பனையில் இருந்த கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. இதன் காரணமாக மணல் விற்பனையில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த மாதம் தமிழகம் முழுவதும் குறிப்பாக திருச்சி, வேலூர், தஞ்சாவூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பொதுப்பணித்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த மணல் குவாரிகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். ஐஐடி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் உதவியோடு ட்ரோன் மூலமாக சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் அதனை நடத்தி வந்த குவாரி குத்தகைதாரர்களுக்கு அமலாக்கத்துறை ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் மணல் குவாரி அமைக்கப்பட்டு இருந்த மாவட்டங்களுக்கு உட்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கும் தற்போது அமலாக்க துறை சம்மன் அனுப்பியுள்ளது. பொதுவாக மணல் குவாரி பிரச்சினைகளில் அரசியல்வாதிகள் தான் எப்போதும் சிக்கிக் கொள்வது உண்டு. ஆனால் முதல் முறையாக இப்போது 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu