பிரபல ஒளிப்பதிவாளர் இயக்குநர் KV குகன் இயக்கும் பரபர திரில்லர்
ஒளிப்பதிவாளர், இயக்குநர் KV குகன், இந்திய திரை உலகில், பலராலும் கொண்டாப்படும், மதிப்பு மிகுந்த நபர்களில் ஒருவர். அவர் தெலுங்கில் இயக்குநராக "118" படம் மூலம் அறிமுகமானார். இந்த திரில்லர் திரைப்படம், தெலுங்கு திரையுலகில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று, பெரு வெற்றி பெற்றது. இப்படத்தின் வெற்றி தெலுங்கில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளுக்கும் பரவியது. பல தென்னிந்திய மொழிகளில் இப்படம் டப் செய்யப்பட்டது. இப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து "WWW (who, where, why)" எனும் தலைப்பில் தனது புதிய படத்தை இயக்குகிறார் KV குகன். திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் ஆதித் அருண், ஷிவானி ராஜசேகர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது. இப்படத்தின் படபிடிப்பு முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் KV குகன் கூறியதாவது...
" WWW" திரைப்படம் ரசிகர்களை பலவிதங்களில் ஆச்சர்யபடுத்துவதோடு மட்டுமல்லாமல், படத்தின் கதைப்போக்குடன் சேர்ந்து ரசிகர்களும் விடை தேடும்விதமாக அமைந்து இருக்கும். எனது முதல் தெலுங்கு மொழி படமாக வெளியான "118" படத்திற்கு, ரசிகர்கள் கொடுத்த பெரும் ஆதரவு, எனக்கு மேலும் பொறுப்புணர்வை கொடுத்துள்ளது. "118"- திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாது, மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிட்ட பகுதிகளிலும், நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றி தான் இரு மொழிகளிலும், ஒருசேர படத்தை எடுப்பதற்கான உத்வேகத்தை எனக்கு தந்துள்ளது. தியேட்டரில் இப்படம் ரசிகர்களுக்கு புது அனுபவமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்குமென நம்புகிறேன். டிரெய்லர், இசை மற்றும் உலகமெங்கும் படம் வெளியிடும் தேதியை, விரைவில் அறிவிப்போம்.
படத்தின் நடிகர் குழுவை பற்றி KV குகன் கூறியதாவது...
எனது முதல் படமான "இனிது இனிது" திரைப்படத்தில், முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்தவர் ஆதித். அப்படத்தின் தயாரிப்பாளர் பிரகாஷ் ராஜ் அவர்களால் அறிமுகம் செய்து வைக்கபட்டவர். அதன் பிறகு தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து சிறப்பான நடிகர் எனும் பெயர் பெற்றார். தமிழில் நடிகர் தனுஷுடன் "தங்க மகன்" திரைப்படத்தில் எதிர்மறைத்தன்மை பாத்திரத்தில் நடித்தார் பல வெற்றி பெற்ற தெலுங்கு படங்களில்
நடித்து புகழ் பெற்றார். டாக்டர் ராஜசேகர் மற்றும் ஜீவிதா ராஜசேகர் அவர்களின் மகளான, ஷிவானி மிகவும் திறமையான நடிகை. படத்தின் பல இடங்களில், அசாத்தியமான காட்சிகளையும், ஒரே டேக்கில் அவர் நடித்து அசத்தியது படக்குழுவையே ஆச்சர்யப்படுத்தியது. இது சினிமா மீது அவர் வைத்திருக்கும் காதலையும் அர்பணிப்பையும் வெளிச்சம் போட்டு காட்டுவதாக இருந்தது.
இப்படத்தை இயக்குவதுடன் படத்தின் திரைக்கதையை எழுதி ஒளிப்பதிவும் செய்துள்ளார் KV குகன். Ramantra Creations சார்பில் Dr. ரவி P. ராஜு டட்லா தயாரிக்க விஜய் தரன் டட்லா இணை தயாரிப்பு செய்கிறார். தொடர்ச்சியாக வெற்றிகரமான ஆல்பங்களை தந்து வரும் சைமன்.K.கிங் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தம்மிராஜு படத்தொகுப்பு செய்ய, KN விஜயகுமார் வசனமெழுதியுள்ளார். பிரேம் ரக்ஷித் நடன அமைப்பு செய்ய, மதன் கார்க்கி, கு.கார்த்திக் பாடல்கள் எழுதியுள்ளனர். மக்கள் தொடர்பாளராக சுரேஷ் சந்திரா பணியாற்றுகிறார்.
-மைக்கேல்ராஜ்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu