நான்கு நாட்களில் தமிழகத்தில் 5 பத்திரிகையாளர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலி.
நான்கு நாட்களில் தமிழகத்தில் 5 பத்திரிகையாளர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலி
சென்னை பத்திரிகையாளர் மன்றம் வேதனை ! ஆழ்ந்த இரங்கல்!
கடந்த 08.05.2021 அன்று கன்னியாகுமரி மாவட்டம் அருமனை தினகரன் செய்தியாளர் திரு.டென்சன் (வயது 50 ) கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியானார். அதே நாளில் மதுரையில் முன்னாள் தினகரன் நாளிதழ் மூத்த பத்திரிகைப் புகைப்படக் கலைஞர் மற்றும் மதுரை செய்தியாளர் சங்கத் தலைவராக நீண்டகாலம் சேவையாற்றிய நம்பிராஜன் ( வயது 64 ) கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளார். அடுத்த நாளே 09-05-2021 அன்று மதுரையில் ( முன்னாள் தி இந்து , டிடி நெக்ஸ்ட் நாளிதழ்களின் நிருபர்) பத்திரிகையாளர் சரவணன் (வயது 48 ) கொரோனாவிற்கு பலியாகி உள்ளார்.
.ப.பிரபு (வயது 58 ) விகடன் குழுமத்தில் வடிவமைப்பாளராகப் பணியில் சேர்ந்து முப்பதாண்டுகளுக்கு மேலாக பணியாற்றி தலைமை வடிவமைப்பாளராக பணியாற்றியவர். மூத்த பத்திரிகையாளர்கள் மதன் மற்றும் ராவ் அவர்கள் நடத்தும் விகடகவி இதழின் வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தவர் .
கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு சென்னை ஓமந்துரார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த 10-05-2021 அன்று சிகிச்சை பலனளிக்காமல் இயற்கை எய்தினார்.
நேற்றைய தினம் ( 11.05.2021) அன்று கோயம்பத்தூர் மாவட்டம் சூளுர் பகுதி மாலைமலர் செய்தியாளர் திரு.மணி (வயது 47 ) கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளார்.
இப்படி கடந்த நான்கு நாட்களில் தமிழகத்தில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொரோனா நோய்த்தொற்றுக்கு பலியாகியுள்ளது பெரும் வேதனையைத் தருகிறது. முன்களப் பணியாளர்களாக - கொரோனா விழிப்புணர்வு பணியில் ஈடுபட்டு வரும் பத்திரிகையாளர்கள் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாவது மிகப் பெரிய வேதனையைத் தருகிறது. ஐந்து பத்திரிகையாளர்களின் மறைவுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. மறைந்த பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரண நிதியுதவியை வழங்கிட வேண்டுகிறோம்.
கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் பத்திரிகையாளர்கள் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வது மிக மிக முக்கியம். தனி மனித இடைவெளி , முகக்கவசம் உள்ளிட்ட அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மிக அவசியம்.
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் முன்களப் பணியாளர்களான பத்திரிகையாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மருத்துவமனைகளில் இடம் கிடைப்பது பெரும் சிரமமாக உள்ளது.
காவல்துறையினருக்கு உள்ளதைப் போன்று தனியாக சிறப்பு சிகிச்சை முகாமை அமைத்திட தமிழக அரசு முன்வர வேண்டும் என்று நம்பிக்கையுடன் வேண்டுகிறோம். இதே கோரிக்கையை கடந்த ஆட்சிக் காலத்தில் முன்வைத்தும் எவ்வித பலனுமில்லை. இந்த அரசு செய்யும் என்று நம்புகிறோம்.
ஒவ்வொரு இரங்கற் செய்தியும் பெரும் வேதனையைத் தரும் நிலையில் நான்கு நாட்களில் ஐந்து பத்திரிகையாளர்கள் கொரொனாவிற்கு பலியானது சொல்ல முடியாத வேதனையைத் தருகிறது. பத்திரிகையாளர்கள் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க தமிழக அரசை வேண்டுகிறோம்.
நாமும் நம்மை பாதுகாத்துக் கொள்ள கவனம் தேவை.
✍️ஆழ்ந்த துயரங்களுடன்
பாரதிதமிழன்
இணைச்செயலாளர்
சென்னை பத்திரிகையாளர் மன்றம்
12-05-2021
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu