மாணவர்களுக்கு 35 சதவீத பாடங்கள் குறைப்பு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, 35 சதவீத பாடத்திட்டம் குறைக்கப்பட்டு உள்ளது.
கொரோனா நோய் பரவலை தடுக்க, பள்ளிகள், கல்லுாரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும், 2020 ம் ஆண்டு மார்ச் 25 முதல் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு பெருமளவு குறைந்துள்ளதை தொடர்ந்து, நாளை முதல், பத்து மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு மட்டும், பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பொதுத் தேர்வுக்கு சில மாதங்களே உள்ளதால், அனைத்து பாடங்களையும் நடத்த முடியாத நிலை உள்ளது. எனவே, ஏற்கனவே வெளியிடப்பட்ட, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பாடத் திட்டத்தில், 35 சதவீத பாடங்களை குறைத்து, பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குறைக்கப்பட்ட, முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத் திட்டத்தை, ஆசிரியர்கள் முதலில் முடிக்க வேண்டும். நேரம் இருந்தால், மீதமுள்ள பாடங்களையும் முடிக்கலாம். போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள், அந்தந்த தேர்வுக்கு ஏற்ப, பாடத் திட்டங்களை படிக்க வேண்டும் என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.மேலும் பயோ மெட்ரிக் வருகை பதிவை, தற்போது பயன்படுத்த வேண்டாம். அதற்கு தொடுதல் இல்லாத வகையில், மாற்று ஏற்பாடு மேற்கொள்ள வேண்டும். மைதானத்தில் பிரார்த்தனை கூட்டம், விளையாட்டு போன்ற நடவடிக்கைகளுக்கு, தற்போது அனுமதி இல்லை. விடுதிகளில் உணவு, சுகாதாரத்தை உரிய முறையில் பேண வேண்டும். சுகாதாரத் துறை சார்பில், ஒவ்வொரு பள்ளியிலும், ஒரு உதவியாளர் அல்லது செவிலியர் பணியில் இருப்பார்.
அவசர மருத்துவ உதவிக்கான எண்கள், பள்ளிகளின் அறிவிப்பு பலகையில் இடம் பெற வேண்டும்.மாணவர்களின் உடல் வெப்பநிலை, தினமும் பரிசோதிக்கப்பட வேண்டும். பள்ளிகள், காலை முதல் மாலை வரை இயங்க வேண்டும். முதல் இரண்டு நாட்கள், மாணவர்களுக்கு, கவுன்சிலிங் நடத்தி, மனநல ஆலோசனை தர வேண்டும். அதன் பின்னரே, பாடம் நடத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu