சட்டப்பேரவை தேர்தல் 2021 கையேடு : தலைமை தேர்தல் அதிகாரி வெளியீடு
சென்னையில் உள்ள இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கையேடு 2021-ஐ சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்யபிரத சாகு நேற்று வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் திரு.சத்யபிரத சாகு பேசியதாவது:-
கொரோனா பெருந்தொற்றுப்பரவல் முற்றிலுமாக நீங்காத நிலையில், இந்த சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தொற்று மேலும் பரவாமல் இருக்க அனைவருமே கொரோனா தடுப்புக்கான வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். தொற்றுப் பரவாதபடி, வாக்காளர்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குகளைப் பதிவு செய்வதற்கு வசதியாக தேர்தல் ஆணையம் கையுறைகளை இலவசமாக விநியோகிக்க உள்ளது.
கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்துவதற்கு, தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தக் கூட்டங்களில் பங்கேற்கும் போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கான சக்கர நாற்காலி வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. பார்வையற்றவர்கள் வாக்களிக்கும் வசதியும் (பிரெய்லி எழுத்து பதிவுகள்) அளிக்கப்பட உள்ளது.
இந்த முறை வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை 34 சதவீதம் அதிகரிக்கிறோம். அங்கு பணியாற்ற இருக்கும் அலுவலர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து வருகிறோம்.
ஓட்டு எந்திரம், வாக்குப்பதிவு உறுதிச் சீட்டு எந்திரங்கள் (விவிபேட்) ஆகியவை மிகுந்த பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்குப் பிறகு அவற்றை இடமாற்றம் செய்வதற்கும் போதிய அளவிலான பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது.தேர்தல் செலவுகளைக் கண்காணிக்க சிறப்பு தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள்,சி-விஜில் (C-Vigil) செல்போன் செயலி மூலம் தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பான புகார்கள், படங்களை அனுப்பலாம்என்று அவர் கூறினார்,
இந்த நிகழ்ச்சியில் திரு.சத்யபிரத சாகுவிடம் இருந்து கையேட்டின் முதல் பிரதியை மூத்த பத்திரிகையாளர் திரு.மோகன் பெற்றுக் கொண்டார். அதை தயாரிக்க உதவிய மூத்த பத்திரிகையாளர்கள் திரு.பாலசுப்பிரமணியன், திரு.மணிமாறன், திரு.முருகன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பாராட்டப்பட்டனர்.
சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் திரு.மா.அண்ணாதுரை தொடக்க உரையாற்றினார். அவர் தனது உரையில், கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டப் பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, செய்தியாளர்களுக்கு உதவும் வகையில், தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் கையேடு 2021-ஐ சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் தயாரித்துள்ளது என்றும், முந்தைய தேர்தல் முடிவுகள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறிப்பாக கொரோனா தொற்றுப் பரவல் தொடர்பான சிறப்பு விதிமுறைகள், 234 தொகுதி வாரியான தரவுகள், தொகுதி சீரமைப்பு விவரங்கள், தொகுதி வாரியான வாக்காளர் எண்ணிக்கை, வேட்பாளர்களும், வாக்காளர்களும் கவனிக்க வேண்டிய அம்சங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், தேர்தல் பார்வையாளர்களின் பொறுப்புகள் என்று பல்வேறு தகவல்களுடன் இந்த கையேடு விரிவாக தொகுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu