இந்தியன்-2 ஷூட்டிங் மீண்டும் எப்போது?
'இந்தியன்-2' படத்திற்கு குறைந்தபட்சமே 200 பேர் தேவைப்படுகிறார்கள். இப்போது, இந்தப் படத்திற்கு மட்டும் சிறப்பு விதிவிலக்கெல்லாம் கேட்க முடியாது. கேட்டால், இது கமல்ஹாசன் நடிக்கும் படம் என்பதால் அரசியலில் போய் முடியும். இதனால், கொரோனா முழுமையாக முடியட்டும் என்று அந்தப் படக் குழு காத்திருந்தது.
இப்போது ஓரளவுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்டன. கமல்ஹாசன் நடத்தி வரும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியும் முடியப் போகிறது. அடுத்துத் தேர்தலுக்கான பணிகள் துவங்கவிருக்கின்றன. கமல்ஹாசனுக்கு நிறைய தேர்தல் வேலைகள் காத்திருக்கின்றன.
கூட்டணிப் பேச்சு. யாருடன் கூட்டணி.. தேர்தல் பிரச்சாரம் என்று பல வேலைகளுக்கிடையில் இந்த 'இந்தியன்-2'-வையும் அவர் தூக்கி சுமப்பாரா என்பதே இப்போது சந்தேகமாகிவிட்டது.
கமல்ஹாசனைப் பொறுத்தவரையில் 'இந்தியன்-2' படத்திற்கு அவர் முதலில் ஒத்துக் கொண்டதே 2021 தேர்தல் நேரத்தில் இந்தப் படத்தை வெளியிட்டு அதன் மூலமாக ஒரு பப்ளிசிட்டியைத் தேடிக் கொள்ளலாம் என்பதுதான். ஆனால் அதற்கு கொரோனா வைரஸ் மூலமாகத் தடைக்கற்கள் வந்து விழுந்துவிட்டது.
இப்போது, இத்தனை மாத இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பைத் துவக்கலாம் என்றால் பச்சைக் கொடி காட்ட வேண்டிய தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் ஆழ்ந்த மெளனம் சாதிக்கிறது.
இதுவரையிலும் 'இந்தியன்-2' படத்தில் அது போட்டிருக்கும் முதலீடு.. இனிமேல் போட வேண்டிய முதலீடு.. வரவிருக்கும் எதிர்பாராத செலவுகள் என்று எப்படி கணக்குப் போட்டாலும் அது 250 கோடியைத் தாண்டிவிடும். இந்தத் தொகையை கொரோனாவுக்கு பிந்தைய காலக்கட்டத்தில் சேதாரம் இல்லாமல் திரும்பப் பெற முடியுமா என்கிற சந்தேகம் லைகாவுக்கு வந்திருக்கிறது. இதனால்தான் இப்போது அவசரப்பட வேண்டாம் என்று யோசிக்கிறதாம்.
லைகா நிறுவனத்தில் முற்றிலும் புதிய நிர்வாகிகளைக் கொண்டு பொறுப்புக்கு வந்திருக்கும் டீம் அந்த நிறுவனத்தைத் தூக்கி நிறுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதால் நிறுவனத்தின் பொருளாதாரத்தை சரி செய்யவே முதலில் நினைக்கிறார்கள். இதில்தான் 'இந்தியன்-2'-வும் மாட்டிக் கொண்டுள்ளது.
மிக விரைவில் இரண்டில்-ஒன்று என்பதுபோல ஒரு அறிக்கை லைகாவிடமிருந்து வெளியாக வாய்ப்புண்டு என்கிறார்கள் தமிழ்த் திரைப்படத் துறையினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu