மாநகராட்சி தேர்தலுக்கு கவுன்சிலர் வேட்பாளர் செய்த செலவு ரூ.1.75 கோடி

மாநகராட்சி தேர்தலுக்கு கவுன்சிலர் வேட்பாளர் செய்த செலவு ரூ.1.75 கோடி
X
கையூட்டு போதையில் சிக்க வைக்கப்பட்ட வாக்காளர்களை இனி அரசியல் கட்சிகளே நினைத்தாலும் மாற்ற முடியாது.

ஒரு மாநகராட்சியின் மாமன்ற அவைக்காக போட்டியிட்ட ஒரு கட்சியின் உறுப்பினர் 19ம் தேதி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு மட்டும் செலவு செய்த தொகை ஒன்றே முக்கால் கோடி ரூபாய். ஒரு மாநகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்காக ஒன்றே முக்கால் கோடி ரூபாய் ஒருவர் செலவு செய்கிறார் என்றால் அவர் ஐந்து ஆண்டுகளில் எத்தனை கோடியை ஈட்ட வேண்டும் என்று எண்ணி பார்த்தால் குறைந்தது 2 கோடியாவது ஐந்து ஆண்டுகளில் அவர் ஈட்ட வேண்டும். இது சாத்தியமா என்று விசாரித்தபோது, ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் ஈட்டி கொண்டிருக்கிறார்கள் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் என்று அதிர்ச்சி தகவலை நமக்கு தருகிறார்கள் உள்ளாட்சி மறைமுக வருவாய் பற்றி நன்கு அறிந்தவர்கள். ஆக நேர்மையான வழியில் நியாயமாக சம்பாதித்து இந்த ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு தலா 2 கோடி என்றால் பத்து கோடி ரூபாயை எந்த நகராட்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் சம்பாதிக்க இயலாது.

முடிந்தவரை எல்லாவற்றையும் சுரண்ட வேண்டும், எல்லாவற்றுக்கும் விலை வைக்க வேண்டும், எல்லோரிடமும் பிடுங்க வேண்டும் எனும் நிலை இருந்தால் மட்டும்தான் ஒரு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஐந்து ஆண்டுகளில் இத்தனை கோடி சம்பாதிக்க இயலும். ஆக ஆண்டுக்கு 2 கோடி என்று 5 ஆண்டுகளில் 10 கோடி வரை சம்பாதிக்க முடியும் என்கிற அந்த தெளிவும் உறுதியும் இருக்கின்ற காரணத்தினால்தான் தேர்தலுக்கு வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுப்பதற்காக அடாவடி செலவுகள் செய்வதற்காக ஒன்றே முக்கால் கோடி ரூபாய் வரை ஒரு கட்சியின் வேட்பாளர் செலவு செய்கிறார் அதுவும் நகராட்சி மன்ற தேர்தலுக்கு. அதேபோல் ஒரு வாக்காளர், எத்தனை கட்சிக்காரர்கள் இந்த கையூட்டை அளித்தாலும், பொருட்களை அளித்தாலும் மகிழ்ச்சியோடு அவற்றை பெற்று கொள்ளக்கூடிய மன நிலை உருவாகி இருக்கிறது. ஒரே வீட்டில் இரண்டு மூன்று கட்சியினரிடம் பணம் வாங்கிக்கொண்டு பணத்திற்கு ஏற்ப, எண்ணிக்கையில் வாக்குகளை அளிக்கக்கூடிய நிலைக்கும் வாக்காளர்கள் வந்துவிட்டார்கள்.

இனி ஒரு அரசியல் கட்சி, தாமாக மனம் திருந்தி இனிமேல் வாக்குகளை பணம் கொடுத்து வாங்க மாட்டோம் என்று எண்ணினால்கூட அந்தக் கட்சி மக்களிடம் வாக்குகளை பெற முடியாத நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. அதேபோல் தேர்தலில் செலவு செய்ய முடியாத எந்த நேர்மையான வசதி குறைவான நபர்களும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. மக்களின் கையூட்டு போதையை அளவுக்கு அதிகமாக ஏற்றி வைத்துள்ள அரசியல் கட்சிகள் புலி வாலைப் பிடிக்கவில்லை மாறாக மத யானையின் வாலை பிடித்திருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவெனில் இந்த கொள்ளை வணிகத்திற்கு "தேர்தல்கள்" என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இந்த நாடு ஜனநாயக குடியரசு என்கிறார்கள். மாநில மக்களின் சுயாட்சி என்கிறார்கள், சமூக நீதி மண் என்கிறார்கள். தன்னாட்சி தேர்தல் ஆணையம் என்கிறார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!