முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் மு.க.அழகிரி?திமுகவில் திடீர் பரபரப்பு
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, மகன் மு.க.அழகிரியை 2014ம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கினார். கருணாநிதி மறைவுக்கு பின்னர் மு.க.அழகிரி திமுகவில் இணைவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது நடக்கவில்லை. 2019 லோக்சபா தேர்தலின்போது மு.க. அழகிரி தனிக்கட்சி தொடங்குவார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் மு.க.அழகிரி திமுகவுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அமைதியாக இருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிகழ்ச்சியில் மு.க.அழகிரியின் குடும்பத்தினர் பங்கேற்றனர். இதன் பின்னரும் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்றபோதும் மு.க.அழகிரியும் முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேரடியாக சந்திக்காமல் இருந்து வந்தனர்.
முதல்வராக பதவியேற்ற பின்னர் மதுரை நிகழ்ச்சிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்லும்போது எல்லாம் மு.க.அழகிரியை சந்திக்கக்கூடும் என கூறப்பட்டது. ஆனால் அண்ணன் மு.க.அழகிரியை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்திக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று பிற்பகல் மதுரையில் இருந்து மு.க. அழகிரி சென்னைக்கு விமானம் மூலம் வருகிறார். சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மு.க.அழகிரி பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க உள்ளார் என்கின்றன அவரது ஆதரவு வட்டாரங்கள். இந்த தகவல் திமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu