ஆலயங்கள் பெயரிலேயே நிவாரணம் : இந்து முன்னணி கோரிக்கை

ஆலயங்கள் பெயரிலேயே நிவாரணம் : இந்து முன்னணி கோரிக்கை
X
இந்து முன்னணி கோரிக்கை

ஆலயங்கள் பெயரிலேயே நிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் துணைத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் உறவினர்களுக்கு தமிழக அரசு உணவு வழங்க அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அதனை இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் இந்து கோவில்களின் வருமானத்திலிருந்து கொடுக்க நினைப்பது ஆட்சேபனைக்குரியதாகும்.

ஏற்கனவே தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு ஆலயங்களின் முன்பு பல ஆண்டுகளாக ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்து கோவில் வருமானத்தை கோவில்களின் வளர்ச்சிப் பணிகளைத் தவிர அரசின் நலத்திட்டங்கள் போன்று வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என மாண்புமிகு உயர் நீதிமன்றம் பலமுறை பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டிய பின்பும் தற்போது புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு தங்களின் சுய விளம்பரத்திற்காக இந்து ஆலயங்களின் நிதியை பயன்படுத்துவது அபத்தமாகும்.

நெல்லை திருநெல்வேலி அரசு மருத்துவமனை முன்பு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உணவுப் பொட்டலம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் படமும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களின் படமும் அச்சிடப்பட்ட பேனர் வைத்து உணவுப் பொட்டலம் வழங்கி உள்ளனர்.

பேனரில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி படமோ பொட்டலங்கள் உடன் திருக்கோயில் பிரசாத விபூதி பொட்டலமோ சுவாமிகளின் படமோ எதுவுமே வழங்கப்பட்டதாக தெரியவில்லை. ஏதோ ஸ்டாலினும், அமைச்சரும் அவர்களது சொந்தக் காசில் வழங்குவது போல தோற்றத்தை ஏற்படுத்துவதாக உணவுப் பொட்டலம் வழங்குவது அமைந்துள்ளது. இது மிகவும் கண்டனத்திற்கு உரியதாகும்.

இந்து ஆலயங்களின் வருமானத்தை எடுத்து அரசின் திட்டங்களுக்காக செலவிடும் தமிழக அரசு அதேபோல பிற மத வழிபாட்டுத் தலங்களின் வருமானத்தை எடுத்து செலவிட முடியுமா என்கின்ற கேள்வி இன்று பொதுமக்களிடையே எழுந்துள்ளது. அரசியல் விளம்பரங்களுக்காக ஆலய வருமானமும் சொத்துக்களும் சூறையாடப்படுவது மிகுந்த வேதனைக்குரியது.

அரசு மருத்துவமனைகளில் உணவுப் பொட்டலம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கஜானாவில் இருந்து அரசு பணத்தை செலவிடும் போது முதலமைச்சர் படத்தை வெளியிடுவதில் எந்த ஆட்சேபணையும் இல்லை. எனவே, மருத்துவமனைகளில் உணவுப் பொட்டலம் வழங்கும் திட்டத்தை அந்தந்த கோவில் நிர்வாகங்கள் சார்பாக திருக்கோவில் பெயரில் அந்த சுவாமி படங்களும் பிரசாதங்களும் உணவு பொட்டலத்துடன் கொடுத்தால் மக்களுக்கு இறை நம்பிக்கையும் மன தைரியமும் ஏற்படும். அவர்களது பசியும் ஆறும் என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்பட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது என V.P.ஜெயக்குமார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!