போலீசாருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது: கனிமொழி
அதிமுக ஆட்சியில் பாதுகாப்பு தரும் போலீசாருக்கே பாதுகாப்பு தேவைப்படுகிறது என்று தூத்துக்குடி தொகுதி எம்பியான கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது ,
தமிழக காவல்துறையில், செல்வாக்கு மிக்க உயரதிகாரியான ராஜேஷ் தாஸுக்கு எதிராக பாலியல் தொந்தரவு புகார் கொடுத்த அந்த பெண் அதிகாரியை ஐ.ஜி.,அந்தஸ்தில் உள்ள எம். ஜெயராம் என்ற அதிகாரி வற்புறுத்தி புகாரை வாபஸ் பெற வைக்க முயற்சிப்பதாக காவல்துறையிலேயே முணுமுணுப்பு கேட்கிறது. தனக்கு எதிரான பாலியல் தொந்தரவு புகாரை அந்த பெண் அதிகாரி திரும்ப பெறவில்லை என்றால், அவரது எதிர்காலத்தையே சிதைத்துவிடுவதாக ராஜேஷ்தாஸ் மிரட்டி வருவதாகவும் காவல்துறையினரிடையே ஒரு தகவல் பரவி வருகிறது. அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி தனக்கு எதிரான புகாரை வாபஸ் பெற்றுவிடுவார் என்றும் அதனால், இந்த விவகாரத்தில் மேல்நடவடிக்கை எதுவும் எடுக்க தேவையிருக்காது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் ராஜேஷ்தாஸ் முறையிட்டுள்ளதாகவும், அதனால், பாலியல் ரீதியான தொந்தரவுக்கு ஆளாகும் பெண்கள் அளிக்கும் புகாரின் மீது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி அமைக்க வேண்டிய விசாரணைக் குழுவையே இதுவரை அமைக்காமல், முதல்வர் பழனிசாமி காலம் தாழ்த்தி வருவதாகவும் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் காவல்துறையில் பெண் அதிகாரிக்கு ஏற்பட்டிருக்கும் இதேபோன்ற நிலைமை, அதே துறையில் கீழ்நிலையில் உள்ள பெண் அதிகாரிகளுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றால், அவர்களின் நிலையை கற்பனை செய்து கூட பார்க்கமுடியவில்லை என்றும் கனிமொழி சுட்டிக்காட்டியுள்ளார். ஏற்கெனவே, எஸ்.பி. அந்தஸ்தில் உள்ள ஒரு பெண் அதிகாரி, தனது மேல் அதிகாரியான ஐ.ஜி. அந்தஸ்தில் உள்ள எஸ்.முருகனுக்கு எதிராக பாலியல் தொந்தரவு புகார் அளித்தார். ஆனால், அந்த புகாரின் பேரிலும் மேல் நடடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால், அதற்குப் பதிலாக குற்றச்சாட்டுக்கு உள்ளான அந்த அதிகாரியை கௌரவிக்கும் விதமாக, தெற்கு மண்டல காவல் துறை அதிகாரியாக அம்மா அரசாங்கம் நியமித்துள்ளது என்றும் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu