சென்னையை இலக்கு வைக்கும் பாஜக
வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து பாஜக தேர்தலை சந்திக்கிறது. கூட்டணி என்பது உறுதியாகி விட்டது. ஆனால், எவ்வளவு தொகுதி என்பது மட்டும் தான் இன்னும் முடிவாக வில்லை. தற்போதைய நிலையில் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கி முன்பை விட உயர்ந்துள்ளதாக கருதும் பாஜக நிர்வாகிகள் அதிக தொகுதிகளை கேட்டு வருகின்றனர்.
இதனால் அதிமுக பாஜக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இதற்கு முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாஜ அதிகமாக போட்டியிடும் பட்டியலில் சென்னை தான் நம்பர் 1 இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்தாற் போல் கோவை, கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்டங்கள் உள்ளன. சென்னைக்கு பக்கத்தில் உள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரும் அந்த பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையை குறிவைக்க காரணம் என்னவென்றால் எவ்வளவு வெற்றி பெற்றாலும் தலைநகரில் எவ்வளவு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளீர்கள் என்பது தான் ஒரு கட்சிக்கு பலம் என்று ஒவ்வொரு கட்சியும் நினைத்து வருகிறது. தலைநகரில் வெற்றி பெறுவதை தான் பெருமையாகவும் கருதி வருகிறது.
அந்த பார்மூலாவை கடைப்பிடித்து தான் சென்னையில் அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சென்னை மாவட்டத்தை குறி வைத்து பாஜக தேர்தல் பணியை முடுக்கி விட்டுள்ளது. கூட்டணியை இறுதியாக விட்டாலும் சென்னையில் வேளச்சேரி, துறைமுகம், விருகம்பாக்கம், தி.நகர், ஆலந்தூர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியை குறிவைத்து தேர்தல் பணிகளை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த முறை வேளச்சேரியில் பாஜ சார்பில் போட்டியிட்ட மாநில செயலாளர் டால்பின் ஸ்ரீதர் 14472 வாக்குள் பெற்றார். விருகம்பாக்கத்தில் போட்டியிட்ட அப்போதைய தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் 19,167 வாக்குகளும், தி.நகரில் போட்டியிட்ட மூத்த தலைவர் எச்.ராஜா 19,888 வாக்குகளையும் பெற்றனர். அதுவும் திமுக, அதிமுக அடுத்ததாக 3 வது பெரிய கட்சி பாஜ என்ற பெருமையை பெற்றது. இதனால், இந்த தொகுதிகளில் அதிக ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
அதனால், கடந்த முறை வேளச்சேரியில் போட்டியிட்ட டால்பின் ஸ்ரீதர் தனக்கு தான் சீட் கிடைக்கும் என்று கே.கே.நகரில் உள்ள வீட்டையை காலி செய்து விட்டு வேளச்சேரிக்கு குடும்பத்துடன் போய் குடியமர்ந்துள்ளார். இந்த முறையும் தி.நகர் தொகுதியில் எச்.ராஜா போட்டியிட விரும்புகிறார். அதேபோல, மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் துறைமுகம் தொகுதி தனக்கு தான் என்று அங்கு முகாமிட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதே போல ஆலந்தூரில் போட்டியிட பொது செயலாளர் கே.டி.ராகவனும் விருப்பம் தெரிவித்துள்ளார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் பொறுப்பாளரான நடிகை குஷ்பு, இந்த தொகுதியில் தனக்கு தான் சீட் கிடைக்கும் என்று தொகுதியை சுற்றி வலம் வருகிறார். சென்னையில் மட்டும் குறைந்தப்பட்சம் 6 தொகுதிகள் வரை பாஜ அதிமுகவிடம் கேட்பதாக கூறப்படுகிறது.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu