தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரியம் பணிக்கான டெண்டர் ரத்து
வீட்டுவசதி வாரிய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் பொதுச் செயலாளரான பூச்சி எஸ்.முருகன் முறைகேடுகள் குறித்து வாரியத்தின் நிர்வாக இயக்குனர் முருகேஷ் ஐ ஏ எஸ் சுக்கு புகார் அனுப்பினார். மேலும் ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு இயக்கத்திலும் இது குறித்து அவர் புகார் அளித்தார். அதில் 'நந்தனம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அலுவலகத்தையும் அதன் அருகே உள்ள தந்தை பெரியார் மாளிகையையும் இணைத்து பாலத்துடன் புதிய கட்டடங்கள் கட்டுவதற்காக விடுக்கப்பட்ட டெண்டர்களில் 668 கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேடுகள் நடந்திருப்பதாக குறிப்பிட்டார். இந்த டெண்டர்கள் குறித்து ஜனவரி 12-ஆம் தேதி நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியான நிலையில் மறுநாளான 13-ஆம் தேதியே கட்டடங்களை இடிப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டி இந்த டெண்டர் விஷயத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்திருப்பதை விளக்கினார்.
அடுத்து இந்த விவகாரத்தில் டெண்டரை ரத்து செய்ய கோரி ஐகோர்ட்டில் பூச்சி முருகன் சார்பில் அவரது வழக்கறிஞர் புகழ் காந்தி வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் இந்த டெண்டரை ரத்து செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து பூச்சி எஸ்.முருகனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது, 'அரசு பின்வாங்கியதில் இருந்தே இந்த டெண்டரில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது உறுதியாகி இருக்கிறது. ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் எடப்பாடி அரசு கடைசி கட்டம் என்பதால் இதுபோல பல டெண்டர்களை அவசரம் அவசரமாக அறிவித்து மேல்மட்டத்தில் இருப்பவர்களின் உறவினர்களின் நிறுவனங்கள் பயன்பெற வழிவகை செய்யப்படுகிறது. இந்த டெண்டர் ரத்து என்பது தி.மு.கழகத்தின் சட்ட போராட்டத்துக்கு கிடைத்த பெரிய வெற்றி.
சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வாடகை வரும் அளவுக்கு பெரியார் மாளிகை கட்டடம் உபயோகப்படுத்தப்பட்டு வந்தது. அந்த கட்டடமும் சரி வீட்டுவசதி வாரிய கட்டடமும் சரி இரண்டுமே ஸ்திர தன்மையுடன் உறுதியாக தான் இருக்கின்றன. இதனை பல்வேறு துறை நிபுணர்களும் உறுதி செய்துள்ளனர். ஆனால் சுயலாபத்துக்காக இந்த இரண்டு கட்டடங்களையும் இடித்து வருமானத்தை இழக்க வைப்பது மட்டுமல்லாமல் வீட்டு வசதி வாரியத்தின் தலைமையக அலுவலகத்தையும் கோயம்பேடுக்கு மாற்றும் முயற்சி நடக்கிறது. அப்படி மாற்றப்பட்டால் வாடகை செலவும் அதிகரிக்கும். ஏற்கனவே நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி ஓய்வூதியதாரர்களின் அறக்கட்டளைக்கு தரவேண்டிய 280 கோடி ரூபாயை வாரிய அதிகாரிகள் தர மறுக்கிறார்கள். வீட்டுவசதி வாரியத்தில் பணி புரிந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் ஊழியர்கள் ஓய்வூதியம் மூலம் மட்டுமே தங்கள் வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள். அவர்களது வாழ்வாதாரத்தையும் கெடுக்கும் செயல் இது. தமிழக அரசு சுயலாபத்துக்காக நன்றாக இருக்கும் கட்டடங்களை இடித்து கட்டுவதை விட்டு விட்டு ஊழியர்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று அவர் கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu