மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்குழு கூட்டம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று (11-ந்தேதி) நடக்கிறது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு தொடங்கிய பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் 700 பேர் வரை கலந்து கொண்டனர். கமல்ஹாசன் தலைமையில் நடக்கும் இந்த பொதுக்குழுவில் கலந்து கொள்ள பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ள கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டு அவர்கள் மட்டுமே இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
காலை 10 மணியில் இருந்து மதியம் 1 மணி வரையில் நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், கூட்டணி குறித்தும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மக்கள் நீதி மய்யம் கட்சியின் 4-வது ஆண்டு தொடக்க விழா மாநாட்டை நடத்துவது பற்றியும் தேர்தல் பிரசாரம் குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்படுவதுடன் பயிற்சி முகாமும் நடைபெற உள்ளதாம்.
இது தொடர்பான கூட்டம் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. மாநில துணை தலைவர் மகேந்திரன் மற்றும் மாநில நிர்வாகிகளான குமரவேல், சந்தோஷ்பாபு, மவுரியா, முரளி அப்பாஸ், சினேகன், பொன்னுசாமி உள்ளிட்டோர் இந்த கூட்டங்களில் கலந்துள்ளனர்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநாட்டை வண்டலூர் அருகே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu