நாளை தை அமாவாசை: எப்போது தர்ப்பணம் கொடுக்கலாம்?
தை அமாவாசை வழிபாடு
தை மாதத்தில் மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கின்றார். அதாவது சனியின் வீடான மகரத்தில் அவரது தந்தையான சூரியன் பிரவேசிக்கின்றார். இதனால் சூரியனை பிதுர்காரகன் என்றும், சந்திரனை மாதுர்காரகன் என்றும் நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.
அதன்படி நாளை தை 29 ம் தேதி அதாவது பிப்ரவரி 11 ஆம் தேதி தை அமாவாசை தினமாகும். அந்நாளில் முன்னோர்களை எவ்வாறு வழிபட வேண்டும்? என்பதைப் பற்றி பார்க்கலாம்.
தெய்வத்தை தொழுது பெறக்கூடிய ஆசீர்வாதத்தை விட, நம் முன்னோர்களை வழிபட்டு அவர்களின் ஆசி வாங்குவது தான் நம் குடும்பத்தை நல்ல முறையில் வாழ வைக்கும் என்பது ஐதீகம்.
கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை முன்தினமே ஊறவைத்து பசுவிற்கு தானமாக வழங்க வேண்டும்.
நாளை அமாவாசை தர்ப்பணம் செய்ய உகந்த நேரம்.
சூரிய உதயத்திற்கு பின்பு அமாவாசை திதி முடிவதற்குள் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
காலை 10 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு.
ராகு, எமகண்டம், குளிகை நேரங்களை தவிர மற்ற நேரங்களில் திதி கொடுக்கலாம்.
எள்ளும், நீரும் இறைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபடலாம். துளசி இலைகளைப் பறித்து முன்னோர் படங்களுக்கு சமர்ப்பிக்கலாம். பித்ரு காரியங்களைச் செய்த பிறகு, தான தர்மங்கள் செய்வதால் கூடுதல் பலன் உண்டாகும்.
தை அமாவாசையன்று ஓர் ஏழைக்காவது உணவிடுதல் நன்மை பயக்கும். அதேபோல் காகம் மற்றும் பசுக்களுக்கு உணவிடுவதும் நல்லது.
தை அமாவாசையன்று புனித நீராடுவது, விரதம் இருப்பது, மாலையில் ஆலய தரிசனம் செய்வது என அனைத்தும் நம்மை புண்ணியவானாக்கும். சிரார்த்தம், தர்ப்பணம், பித்ரு காரியம், படையல் ஆகியவை அனைத்தும், நம் முன்னோர்களை சென்றடைந்து, அவர்களின் ஆத்மாக்களைக் குளிர்விக்கும். மகிழ்ந்து அவர்கள் தரும் ஆசி, நம்மை மட்டுமல்ல நம் சந்ததியையும் வாழவைக்கும்.
அபிராமி அந்தாதி பாடி அம்பிகையை வழிபடுவது சிறந்தது
அமாவாசை நாளில் பவுர்ணமி வருமா? எப்படி வரும் என்று பலரும் கேட்கலாம். தன் மீது பக்தி கொண்ட அபிராமி பட்டருக்காக தனது காதில் இருந்த கம்மலை கழற்றி வானத்தில் வீசி நிலவை உதிக்க வைத்தவர் அன்னை அபிராமி. அமாவாசை தினம் பவுர்ணமி நாளாக மாற்றிய சம்பவம் திருக்கடையூரில் நிகழ்ந்துள்ளது. இது நடந்தது ஒரு தை அமாவாசை நாளில்தான். எனவே இன்றைய தினம் அபிராமி அந்தாதி பாடி அம்பிகையை வழிபடுவது சிறந்தது.
அமாவாசையன்று செய்யக்கூடாதவை :
சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம் செய்யும் நாளில் வீட்டு வாசலில் கோலம் இடக்கூடாது. மேலும் பூஜையறையில் தீபம் ஏற்றக்கூடாது. பூஜையின்போது பித்ருக்கள் வரும் நேரத்தில், இறை தொடர்புடைய காரியங்களைச் செய்யக்கூடாது.
நீரில் இருந்து கொண்டு கரையில் தர்ப்பணம் செய்யக்கூடாது. அதைப்போல் கரையில் இருந்து கொண்டு நீரிலும் தர்ப்பணம் செய்யக்கூடாது. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடிதான் கொடுக்க வேண்டும்.
பலன்கள் :
தை அமாவாசை வழிபாடு செய்வதன் மூலம் பித்ருக்கள் நற்கதியை அடைவதும், திருப்தி அடைவதும் மட்டுமல்லாமல்... நம் வாழ்வில் நற்பலன்களும் பெருகும். மேலும் கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
தை அமாவாசை திருநாளான நாளை புண்ணிய நதி தீர்த்தங்களிலோ அல்லது உங்கள் வீடுகளிலோ, அவரவர் வழக்கப்படி முன்னோர்களுக்கு உரிய வழிபாடுகளை செய்து ஏழேழு தலைமுறைக்கும் புண்ணிய பலன்களைப் பெற்று வாழுங்கள்...!!
-மைக்கேல்ராஜ்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu