எஃகு கோட்டையில் விரிசலா ?
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த ஜெயலலிதாவின் உயிர் தோழி சசிகலா கடந்த மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் பெங்களூருவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது, அவருக்கு கொரோனா நோய் முற்றிலும் குணமான நிலையில் பெங்களூருவில் உள்ள சொகுசு பங்களாவில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், பெங்களூரு மருத்துவமனையில் இருந்து சசிகலா வெளியே வந்தபோது அவரது காரில் அதிமுக கொடி கட்டப்பட்டு இருந்தது.
மேலும், அவர் ஜெயலலிதா பயன்படுத்திய காரில்தான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இது அதிமுகவினரிடம் மிகப்பெரிய விவாத பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் எப்படி அதிமுக கொடியை பயன்படுத்தலாம் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
நாளை மறுதினம் சசிகலா சென்னைக்கு திரும்புகிறார். அவர் தீவிரமாக கட்சிப் பணிக்கு திரும்புவார், அவரது அரசியல் ஆதரவாளர்களுடன் ஆலோசனையை தொடங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், சசிகலா வருகை குறித்தும், அதிமுகவை கட்டுக்கோப்பாக வைப்பது குறித்தும் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இது, கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், நேற்று முன்தினம் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் சென்னை கடற்கரை சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் சசிகலா மீது நேரடியாக புகாரும் அளித்தனர். அந்த மனுவில், `அதிமுக உறுப்பினராக கூட இல்லாத சசிகலா, தனது காரில் அதிமுக கொடி கட்டியுள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறி உள்ளனர்.
இந்த சூழ்நிலையில், பெங்களூருவில் தங்கி ஓய்வு எடுத்துவரும் சசிகலா நாளை சென்னை வருகிறார். அவருக்கு அமமுக சார்பில் மிக பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று முன்தினம் முடிந்தது. கூட்டம் முடிந்ததும் அதிமுகவைச் சேர்ந்த 10 எம்எல்ஏக்கள் பெங்களூருவுக்கு புறப்பட்டுச் சென்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் சசிகலாவை சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் பெங்களூருவில் இருந்து 3 அமைச்சர்களை தொடர்பு கொண்ட சசிகலா, ''நான் சசிகலா பேசுகிறேன். எப்படி இருக்கீங்க அமைச்சர்'' என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார். சசிகலாவின் குரலை கேட்டதும் 3 அமைச்சர்களும் அரண்டு விட்டனர். இவர்கள் 3 பேரும் தொடர்ந்து சசிகலாவின் தீவிர ஆதரவாளர்கள் என்று இப்போதும் கூறப்பட்டு வருகிறது. அவர்களிடம் சசிகலா பேசி நலம் விசாரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா பெங்களூருவில் இருந்தபடியே தனது அதிரடி வேலைகளை காட்ட ஆரம்பித்து விட்டார் என்று கூறப்படுகிறது.
இப்போது அவர் திரைமறைவு வேலைகளைத்தான் தொடங்கியுள்ளார். நேரடியாக களத்தில் இறங்கவில்லை. மேலும், ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு நேராக சென்று அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் தமிழக அரசு அதை மூடிவிட்டது. இதுகுறித்து உறவினர்களிடம் கருத்து தெரிவித்த சசிகலா, ஜெயலலிதாவின் பிறந்த நாள் வருகிறது. அப்போது நான் அஞ்சலி செலுத்த சென்றால் என்ன செய்வார்கள் என்று கூறியுள்ளார். அவர், அதிமுக அரசுக்கு எதிரான வேலைகளை தொடங்கிவிட்டதும், அதிமுகவை உடைக்க அவர் திட்டம் தீட்டியிருக்கும் தகவல்களும், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தெரியவந்துள்ளது.
இதை தொடர்ந்து அவர், துணை முதல்வரும் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்தினார். 10 எம்எல்ஏக்கள் பெங்களூருவில் முகாமிட்டது குறித்து தீவிரமாக ஆலோசித்துள்ளனர். மீதம் இருப்பவர்களை தடுப்பது, தேர்தல் வருவதற்கு முன்னரே ஆட்சி கவிழாமல் பார்த்துக் கொள்வது என்று இருவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தினர். பின்னர் இருவரும் சேர்ந்து சசிகலா வருகை மூலம் ஏற்படும் பின் விளைவுகளை தடுக்க என்ன செய்யலாம் என்று மூத்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தலாம் என்று முடிவு எடுத்தனர்.
அதன்படி, நேற்று மாலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் அதிமுக மூத்த தலைவர்களுடன் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில், சிறையில் இருந்து வெளியே வந்துள்ள சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு அதிமுக நிர்வாகிகள் பலரும் அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டி தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். இதுபோன்ற ஒரு சூழ்நிலையில், அதிமுக நிர்வாகிகளை சசிகலா பக்கம் செல்லாமல் தடுப்பது, அதையும் மீறி ஆதரவு தெரிவித்தால் அவர்கள் மீது கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
கூட்டத்தில், 10 எம்எல்ஏக்கள் பெங்களூரு சென்ற தகவல்கள் குறித்து ஆலோசிக்கவில்லை. ஆனால், ஒற்றுமையாக இருக்க வேண்டும். கட்சிக்கு துரோகம் செய்யக் கூடாது என்று இரு தலைவர்களும் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அமைதியாகவும், பேசாமலும் ஏதோ துக்க வீட்டுக்கு வந்ததுபோல இறுக்கமான முகத்துடனேயே இருந்தனர். கூட்டம் முடிந்த பிறகும் அவர்கள் யாரிடமும் பெரிய அளவில் முகம் கொடுத்து பேசாமல் தங்களது காரில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். அதேநேரத்தில் சசிகலா சென்னைக்கு நாளை வருவதால், அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். அவருடன் நூற்றுக்கணக்கான காருடன் பின் வருவது, வழி நெடுகளிலும் வரவேற்பு அளிப்பது, பிரமாண்டமாக கூட்டத்தைச் சேர்ப்பது என்று முடிவு செய்துள்ளனர். இதனால் சசிகலாவின் வருகை அதிமுகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளிப்படையாக கட்சிப் பணிகளை தொடங்கும்போது புதிய நிகழ்வுகள் தமிழகத்தில் ஏற்படும் என்கின்றனர் அதிமுகவினர்.
அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு நேற்று, ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமைக் கழகத்தில் நேற்று தலைமை கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் பெருமக்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் அனைவரும் கழகப் பணிகளை, கடமை உணர்வோடு எவ்வாறு ஆற்ற வேண்டும் என்பது குறித்தும், நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி அதிமுக அரசின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சாதனைகளை பிரசாரங்கள், துண்டுப் பிரசுரங்கள், விளம்பரங்கள் வாயிலாக பட்டி தொட்டியெங்கும் வாழும் மக்களிடம் விரிவாக கொண்டு சேர்த்து, எனக்கு பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அதிமுக மக்களுக்காகவே இயங்கும் என்ற ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில் ஒற்றுமையோடு விழிப்புடன் தேர்தல் பணியாற்றி கழகத்திற்கு வெற்றியை ஈட்டுவது குறித்தும் அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தக்க ஆலோசனை வழங்கினார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு முன் அரசு கவிழுமா?
தமிழக சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 234. தற்போது, காலியிடம் 4. அதிமுகவில் 124 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் 10 எம்எல்ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் பலம் 114 ஆக குறையும். பேரவையில் மெஜாரிட்டிக்கு 116 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. அதே நேரத்தில், திமுக கூட்டணியில் 105 எம்எல்ஏக்கள், அமமுக 1, சசிகலா ஆதரவு 10 சேர்த்தால் 116 பேர் வரும். எனவே, அதிமுக மெஜாரிட்டியை இழக்கும். அதேசமயம், மேலும் சிலர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கலாம். அல்லது அமைச்சர்களில் சிலர்
சசிகலா பக்கம் தாவும் பட்சத்தில், தேர்தலுக்கு முன்னரே ஆட்சி கவிழும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஆனால், எம்எல்ஏக்கள் எவ்வளவு பேர் கட்சியில் இருந்து வெளியில் வந்தாலும், இனி சட்டப்பேரவை கூட்டம் நடக்காது. கவர்னர்தான் சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டி பலத்தை நிரூபிக்கச் சொல்ல வேண்டும். அல்லது தன் முன் எம்எல்ஏக்களின் அணிவகுப்பை நடத்த சொல்லலாம். இருப்பினும், தேர்தலுக்கு 2 மாதமே உள்ளதால் கவர்னர் ஆட்சி கவிழ்ப்பு திட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பாரா என்ற சந்தேகம் சசிகலாவுக்கு உள்ளது. ஆனாலும், தனது பலத்தை காட்ட சசிகலா தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளார். எஃகு கோட்டை ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது.
-மைக்கேல்ராஜ்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu