எம்.பக்தவத்சலம் நினைவு தினம்

எம்.பக்தவத்சலம் நினைவு தினம்
X
விடுதலைப் போராட்ட வீரரும், தலைசிறந்த நிர்வாகி எனப் போற்றப்பட்டவருமான தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் நினைவு தினம் இன்று (ஜன 31).

எம்.பக்தவத்சலம் பிரபல வக்கீலாக இருந்தவர் நாடு விடுதலை பெற்றதும், தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1946 முதல் 1962 வரை பல்வேறு துறைகளின் அமைச்சராகப் பொறுப்பு வகித்தார்.

1963-ல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். தனது ஆட்சிக்காலத்தில், ஏராளமான மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டுவந்தார். குறிப்பாக திருக்கோயில்கள் நிதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள், மாணவர் விடுதிகள் உள்ளிட்ட சமுதாய நலத் திட்டங்களைத் தொடங்கலாம் என சட்டத் திருத்தம் கொண்டுவந்தவர்.

ரூ.5 லட்சம் நிதியுதவி செய்பவர் களின் பெயரிலேயே கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவித்து, பணக்காரர்கள் பலரையும் கல்வி வளர்ச்சியில் பங்கேற்கச் செய்தார்.

மலரும் நினைவு :

அந்நாட்களில் பக்தவத்சலத்தின் பிறந்த நாளன்று காலையிலேயே வீட்டுக்கு வந்து, அவருக்கு நேரில் வாழ்த்து சொல்பவர்கள் பட்டியல் கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. அந்தப் பட்டியலில் முக்கியமானவர் திமுக தலைவர் கருணாநிதி. அப்படி வருபவரை அங்கு கூடியிருக்கும் பக்தவத்சலத்தின் நண்பர்கள் சற்று நேரம் உரையாற்றச் சொல்லி அவர் பேசுவதை ஆர்வமாகக் கேட்பார்கள். சொந்த ஊரிலிருந்த தனது பூர்வீக வீட்டை ஒரு நூலகமாக மாற்ற கருணாநிதி முடிவெடுத்தபோது, அதைத் திறந்துவைக்க அவர் அழைத்ததும் பக்தவத் சலத்தைத்தான். பக்தவத்சலம் சந்தோஷமாகச் சென்று திறந்துவைத்தார்.

பக்தவத்சலத்தின் கடைசிக் காலத்தில், மதுரையில் கருணாநிதியின் பிறந்த நாள் விழாவுக்கு அழைத்தார் பி.டி.ராஜன். "இந்தத் தள்ளாத வயதில், உடல் நலமும் சரியில்லாத நிலையில், மதுரைக்குச் செல்ல வேண்டாம்" என்று எவ்வளவோ கூறினார்கள் பக்தவத்சலத்தின் உடனிருந்தோர். எதையும் பொருட்படுத்தாமல், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தனக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தவரின் பிறந்த நாள் விழாவுக்கு காரிலேயே சென்று, விழாவில் உரையாற்றிவிட்டுத் திரும்பினார் பக்தவத்சலம்.

-மைக்கேல்ராஜ்

Next Story