தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக குடியரசு தினவிழா

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக  குடியரசு தினவிழா
X
மதுரை கோட்ட வரலாற்றில் முதல்முறையாக 50 சதவீத பெண் ரயில்வே பாதுகாப்பு படை வீராங்கனைகள் அணிவகுப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செவ்வாய் கிழமையன்று ரயில்வே குடியிருப்பு செம்மண் திடலில், தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பாக நடைபெற்ற 72வது குடியரசு தினவிழாவில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர். லெனின் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்பு அவர் ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மதுரை கோட்ட வரலாற்றில் முதல்முறையாக 50 சதவீத பெண் ரயில்வே பாதுகாப்பு படை வீராங்கனைகள் அணிவகுப்பில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில் அவர் பேசும்போது 2020 ஆம் ஆண்டு உடல் ஆரோக்கியத்திலும் நிதிநிலைமையிலும் நமக்கு மிகவும் சோதனையான ஆண்டு. தற்போது கொரோனா கொடுந்தொற்றின் வேகம் வெகுவாக குறைந்து வருகிறது. இதற்கு காரணமான சுகாதாரத்துறை ஊழியர்களை மனமார பாராட்டுகிறேன். மதுரை ரயில்வே மருத்துவமனை அதனுடைய வழக்கமான பணிகள் பாதிக்கப்படாமல் 500 கொரோனா நோயாளிகளை குணப்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.


எதிர்பாராத கொரோனா தொற்று பரவல் காரணமாக மதுரை ரயில்வே கோட்டம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை பயணிகள் வருமானமாக ரூபாய் 260.13 கோடி மட்டுமே திரட்ட முடிந்துள்ளது. முந்தைய வருடம் இதே காலத்தில் பயணிகள் வருமானமாக ரூபாய் 632.62 கோடி ஈட்டியுள்ளது. இருந்தபோதிலும் சரக்கு போக்குவரத்து வருமானமாக ரூபாய் 190.97 கோடி ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 23.1 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை மதுரை கோட்டத்தில் 1.699 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது கடந்தாண்டை காட்டிலும் 32.6 சதவீதம் அதிகமாகும். சரக்கு போக்குவரத்தை அதிகரிக்க வணிக வளர்ச்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டு அவற்றின் மூலம் சிமெண்ட், டிராக்டர், கருவேலங்கரி, உணவுப்பொருள் துறைகளின் தொழில் முனைவோரை காணொலிக் காட்சி மூலமாக தொடர்பு கொண்டு அவர்களது உற்பத்திப் பொருள்களை ரயில் மூலமாக அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. டிசம்பர் மாதம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியி லிருந்து டிராக்டர்கள் 25 சரக்கு ரயில் பெட்டிகளில் முதன்முறையாக அண்டை நாடான வங்காள தேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. டிசம்பர் வரை 61 சரக்கு பெட்டி தொடர்களில் டிராக்டர்கள் அனுப்பப்பட்டு ரூபாய் 11.79 கோடி வருமானம் ஈட்ட பட்டுள்ளது. அதேபோல தூத்துக்குடியிலிருந்து விவசாய உரப்பொருட்கள் அனுப்பப்பட்டு ரூபாய் 139.9 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 42.7 சதவீதம் அதிகமாகும். கொரோனா தோற்று காலத்தில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான உணவு பொருள்களான 1,46,663 டன் அரிசி, கோதுமை, சர்க்கரை ஆகியவை 501 சரக்கு ரயில்கள் மூலம் கொண்டுவரப்பட்டு வினியோகம் செய்யப்பட்டன. அதேபோல பார்சல் சிறப்பு ரயில்களில் 503.94 டன் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டன என்றார் .

கொரோனா தொற்றினால் ரயில் செயல்படாத போது பல்வேறு வளர்ச்சிப் பணிகளும், கட்டமைப்பு பணிகளும் எளிதாக நிறைவேற்றப்பட்டன.

50 கி.மீ தூரமுள்ள மதுரை - மானாமதுரை பிரிவு மற்றும் 117 கி.மீ. நீளமுள்ள மானாமதுரை - மண்டபம் பிரிவு ஆகியவற்றில் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவை முறையே 2021 பிப்ரவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நிறைவு பெறும்.

17 கி.மீ தூரமுள்ள ஆண்டிபட்டி தேனி பிரிவு மற்றும் 15 கி.மீ நீளமுள்ள தேனி - போடிநாயக்கனூர் பிரிவு ஆகியவற்றில் அகலப் பாதையாக மாற்றும் பணிகள் முறையே 2021 ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நிறைவு பெறும்‌.

கங்கைகொண்டான் - திருநெல்வேலி பிரிவில் நடைபெற்றுவரும் இரட்டைப் பாதை பணிகள் 2021 பிப்ரவரி மாதம் நிறைவு பெறும். அதேபோல திருமங்கலம் - துலுக்கபட்டி பிரிவு மற்றும் தட்டப்பாறை - மீளவிட்டான் பிரிவில் பணிகள் ஏப்ரல் மாதம் நிறைவு பெறும். துலுக்கப்பட்டி - கோவில்பட்டி பிரிவு, கோவில்பட்டி - கடம்பூர் பிரிவு ஆகியவற்றில் பணிகள் 2021 மார்ச் மாதத்தில் நிறைவு பெறும். மதுரை - திருமங்கலம் பிரிவில் நடைபெற்றுவரும் இரட்டை பாதை பணிகள் 2022 மார்ச் மாதம் முடிவு பெறும்.

ரயில்களின் வேகம் கடம்பூர் - வாஞ்சிமணியாச்சி - கங்கைகொண்டான் பிரிவில் மணிக்கு 60 கிலோ மீட்டரிலிருந்து 100 கிலோ மீட்டர் ஆகவும், மதுரை - திருச்சி பிரிவில் 100 கிலோ மீட்டரிலிருந்து 110 கிலோ மீட்டராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயில்களின் வேகம் டிசம்பர் மாதத்தில் மணிக்கு 21 கிலோ மீட்டரிலிருந்து 44 கிலோ மீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் சரக்கு ரயில்கள் அதிகபட்சமாக 48 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டன. மதுரை அருகே உள்ள கப்பலூரில் செயல்பட்டுவரும் அரசு எரிபொருள் நிறுவனத்திற்கு திருப்பரங்குன்றத்தில் இருந்து தனி சரக்கு ரயில் பாதை விரைவில் துவக்கப்பட இருக்கிறது. சென்னை ஐஐடி குழுவுடைய தொழில்நுட்ப ஆலோசனைப்படி பாம்பன் ரயில் பாலம் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கடையநல்லூர், வாஞ்சி மணியாச்சி, கங்கைகொண்டான், நாரைக்கிணறு, குண்டரா, ஸ்ரீவில்லிபுத்தூர், கல்லல், மேலக்கொன்குளம், பழனி, கோமங்கலம், திருப்பரங்குன்றம், அவனீஸ்வரம் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 17 ரயில் நிலையங்களில் நடைமேடைகள் நீட்டிப்பு செய்யப்பட்டு வருகின்றன. டிசம்பர் மாதம் வரை 33 கிலோ மீட்டர் நீளமுள்ள ரயில் பாதைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. சென்ற ஆண்டில் இதே காலத்தில் 25.71 கிலோமீட்டர் ரயில் பாதைகளே புதுப்பிக்கப்பட்டன. 72 கிலோமீட்டர் ரயில் பாதையில் சரளைக் கற்கள் சலித்து மேம்படுத்தப்பட்டுள்ளன . 55 கடைகளில் ரூபாய் 14 கோடி செலவில் தயார்நிலை கழிவறைகள் நிறுவப்பட இருக்கின்றன. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக கொரோனா தொற்றுக் காலத்தில் 42 தொழிலாளர் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. 43 ரயில் பெட்டிகள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டன. தீ விபத்தை தடுக்க, ரயில்கள் செல்லும் வேகத்தில் அதன் சக்கர அச்சில் ஏற்படும் வெப்ப நிலையை கண்டறிய ஒருங்கிணைந்த கண்காணிப்புடன் கூடிய சிறப்பு கருவிகள் கூடல் நகர், பரமக்குடி, கடம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ளன. இதுபோன்ற கருவிகள் காரைக்குடி, திண்டுக்கல், செங்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களிலும் நிறுவப்பட இருக்கின்றன. கடந்த மூன்று மாதத்தில் 900 தொழிலாளர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று காலத்தில் ரயில்களை இயக்கிய பணியாளர்கள் காணொலிக் காட்சி மூலமாக தொடர்பு கொள்ளப்பட்டு அவர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கப்பட்டது என்றார் .

கொரோனா தொற்றுக் காலத்தில் மிகச் சிறப்பாக பணியாற்றிய 100 ரயில்வே மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கி பாராட்டினார். விழாவின் இறுதியில் ரயில்வே பாதுகாப்பு படை நாய்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் லலித் குமார் மன்சுகானி, முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரி சுதாகரன், ரயில்வே பாதுகாப்பு படை ஆணையர் அன்பரசு மற்றும் மக்கள் தொடர்பு பொறுப்பு அதிகாரி நிறைமதி எழிலன் பிள்ளைக்கனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

-மைக்கேல்ராஜ்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!