கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்? கல்யாணம்!

துல்கர் சல்மான், ரிது வர்மா, நிரஞ்சனி அகத்தியன் நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் கடந்த வருடம் பிப்ரவரி 28 அன்று வெளியானது.
ரசிகர்களின் வரவேற்பு பெற்ற இந்தப் படத்தை ரஜினியும் பாராட்டியுள்ளார். இயக்குநர் தேசிங் பெரியசாமியுடன் ரஜினி பேசியதன் ஆடியோ சமூகவலைத்தளத்தில் வெளியானது. இத்தனை நாள் படம் பார்க்காமல் இருந்ததற்கு மன்னிக்கவும். மிகவும் தாமதமாகச் சொல்கிறேன். வாழ்த்துகள். எனக்கும் ஒரு கதை தயார் செய்யுங்கள். நிஜமாகவே சொல்கிறேன். யோசித்து வையுங்கள் என்று தேசிங் பெரியசாமியிடம் ரஜினி பேசினார்.
இந்நிலையில் இயக்குநர் தேசிங்கும் நடிகை நிரஞ்சனியும் அப்படத்தின் படப்பிடிப்பின்போது காதலர்கள் ஆனார்கள். இந்தக் காதல் தற்போது திருமணமாக மலரவுள்ளது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் அகத்தியனின் இளைய மகளான நிரஞ்சனி, தேசிங் பெரியசாமியைத் திருமணம் செய்யவுள்ளதை அகத்தியனின் மூத்த மகள் கிருத்திகாவின் கணவரும் இயக்குநருமான திரு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்?? கல்யாணம்! என ட்வீட் செய்து திருமணப் பத்திரிகையின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
அகத்தியனின் எல்லா மாப்பிளைகளும் இயக்குநர் மாப்பிளைகள் என நிரஞ்சனியின் சகோதரியும் நடிகையுமான விஜியலட்சுமி இன்ஸ்டகிராமில் பதிவு எழுதி இருவருடைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
நிரஞ்சனி நடித்த முதல் படம் - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இதற்கு முன்பு வாயை மூடி பேசவும், சிகரம் தொடு, காவியத் தலைவன், கபாலி போன்ற படங்களில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu