சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பிறந்த தினம் இன்று
வெண்கலக் குரலோன் புகழ்பெற்ற கர்னாடக இசைப் பாடகரும், திரைப்படப் பின்னணிப் பாடகருமான சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பிறந்த தினம் இன்று (ஜனவரி 19).
நாகை மாவட்டம் சீர்காழியில் (1933) பிறந்தவர். தந்தை நடத்தும் ராமாயண இசை நாடகத் தில் சிறு வயது ராமனாக நடித்து பாடல்கள் பாடி அனைவரையும் கவர்ந்தார் குழந்தையாக இருந்த கோவிந்தராஜன்.
சீர்காழி வாணிவிலாஸ் பாட சாலையில் பயின்றார். இளம் வயதில் எம்.கே.தியாகராஜ பாகவதர், பி.யு.சின்னப்பா, கிட்டப்பாவின் பாடல்களை விரும்பிக் கேட்டு தானும் பாடுவார். தேவி நாடகக் குழு, பாய்ஸ் நாடக கம்பெனியில் இணைந்து நடிப்புத் திறன், இசைத் திறனை வளர்த்துக்கொண்டார்.
'சினிமா உலகம்' என்ற பத்திரிகையை நடத்திவந்த பி.எஸ்.செட்டியார், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் துணை நடிகராக இவரை சேர்த்துவிட்டார். ஓய்வு நேரத்தில் இவர் பாடுவதைக் கேட்ட மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரமும், இசையமைப்பாளர் ஜி.ராமநாதனும் இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது என்று வாழ்த்தினார்கள்.
பி.எஸ்.செட்டியார் அறிவுரையின்படி சென்னை தமிழ் இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். 1949-ல் இசைமாமணி பட்டம், 1951-ல் சங்கீத வித்வான் பட்டம் பெற்றார். சிறந்த புல்லாங்குழல் கலைஞர் திருப்பாம்புரம் சுவாமிநாத பிள்ளையிடம் பயிற்சி பெற்று இசைத் திறனை வளர்த்துக்கொண்டார்.
கச்சேரிகளுக்கு இவரையும் உடன் அழைத்துச் செல்லும் சுவாமிநாத பிள்ளை, இவரை தன் மகன் என்றே மற்றவர்களிடம் அறிமுகம் செய்வாராம். கடும் உழைப்பாளியான சீர்காழி, அயராத சாதகம் மூலம் இசை உலகில் நிலைத்த இடம் பெற்றார். சென்னை மியூசிக் அகாடமியில் 1951-ல் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.
1953-ல் பொன்வயல் என்ற படத்தில் சுத்தானந்த பாரதியின் 'சிரிப்புத்தான் வருதையா' என்ற பாடலை தன் வெண்கலக் குரலில் பாடி தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதற்கு முன்னரே ஔவையார் திரைப்படத்துக்காக 'ஆத்திச்சூடி' பாடியிருந்தார்.
'பட்டணந்தான் போகலாமடி', 'அமுதும் தேனும் எதற்கு', 'உள்ளத்தில் நல்ல உள்ளம்', 'கண்ணன் வந்தான்', 'ஆடி அடங்கும் வாழ்க்கையடா', 'தேவன் கோவில் மணியோசை' போன்ற பாடல்கள் இவருக்கு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுத் தந்தன. ஏராளமான பக்திப் பாடல்களையும் பாடியுள்ளார்.
சங்கீத அகாடமி விருது, இசைப் பேரறிஞர் விருது, பத்ம உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 1983-ல் சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது. சென்னை தமிழ் இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றினார்.
இசை அரங்குகளில் தமிழ்ப் பாடல்களையே பாடியவர். இலங்கை, லண்டன், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் ஏராளமான இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். தெய்வத் திருமணங்கள், அகத்தியர், ராஜராஜசோழன் உள்ளிட்ட பல படங்களில் தனது அபார நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார்.
30 ஆண்டுகளுக்கு மேல் திரைப் பாடல்களையும், பக்திப் பாடல்களையும் தனித்துவம் வாய்ந்த தன் குரலால் பாடி, ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் 55-வது வயதில் மாரடைப்பால் (1988) காலமானார்.
கட்டுரையாளர் : மைக்கேல்ராஜ்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu