பள்ளிகள் திறப்பு -தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
19-ந் தேதி அனைத்து பள்ளிகளும் திறப்பதால் அதற்கான முன் ஏற்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரிகள் மாவட்டங்களில் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவுறுத்தி உள்ளார். அதன் அடிப்படையில் மாணவர்களை பள்ளி வளாகத்தில் எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் புதிய பாடத்திட்டம் அறிவிக்கப்படும். அதனால் தேர்வு குறித்த பயம் தேவையில்லை என்பதை மாணவர்களுக்கு தெளிவாக்க வேண்டும். 18-ந்தேதி (திங்கட்கிழமை) பள்ளிகளை கல்வி அதிகாரிகள் குழு ஆய்வு செய்வார்கள். அதனால் அனைத்து ஆசிரியர்களும் காலை 9.30 மணிக்குள் பள்ளியில் இருக்க வேண்டும். மாலை 4.30 மணிவரை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சிறப்பு வகுப்பு, மாலை வகுப்பு நடத்த தேவையில்லை. பாட ஆசிரியர்கள் தவிர மற்ற ஆசிரியர்கள் (உடற்கல்வி, இடைநிலை) ஒழுக்கத்தை கண்காணிக்கவும், உடல் வெப்ப பரிசோதனை, சானிடைசர் பயன்படுத்துதல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். அனைத்து மாணவர்களும் காலை பள்ளிக்கு வந்தவுடன் பள்ளி நுழைவு வாயில் மூடப்பட வேண்டும். பள்ளிக்கு வருகை தந்த மாணவர்களை எக்காரணத்தை கொண்டும் பள்ளி முடியும் வரை வெளியே அனுமதிக்க கூடாது.
மாணவ-மாணவிகளுக்கு உடல் நலமின்மை கண்டறியப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு ஆசிரியர்கள் அழைத்து செல்ல வேண்டும். வைட்டமின் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை பள்ளி வகுப்பு ஆசிரியர்கள் மூலமாக வழங்கப்படும். இறைவணக்க கூடுகை, விளையாட்டு பயிற்சி உள்ளிட்ட இதர வகுப்புகள் நடத்தக்கூடாது.
மாணவர்கள் பஸ் பயணத்தை குறைத்துக் கொண்டு சைக்கிளில் வருவதை ஊக்குவிக்க வேண்டும். பெற்றோர் அழைத்து வந்துவிடுவதை ஊக்குவிக்க வேண்டும். பெற்றோரின் விருப்ப கடிதம் மாதிரி படிவம் வழங்கப்படும். அதனை பூர்த்தி செய்து மாணவர்கள் வகுப்பு ஆசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். எந்த ஒரு மாணவரையும் வருகை பதிவு கட்டாயப்படுத்தக் கூடாது. 10-ம் வகுப்பு மாணவர் களுக்கு மாலை 4.15 மணிக்கும், 12-ம் வகுப்பு மாணவர் களுக்கு மாலை 4.30 மணிக்கும் வகுப்பு விடப்படும். அனைத்து ஆசிரியர்களும் 18-ந் தேதி முதல் 100 சதவீதம் பள்ளிக்கு வருகை புரிய வேண்டும். ஆசிரியர்கள் முதல் இரண்டு நாட்களுக்கு மாணவர்களுக்கு கவுன்சிலிங் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu