திருப்பூர் குமரன் நினைவு தினம்
1932 ஆம் ஆண்டு காந்தியை கைது செய்தது ஆங்கிலேய அரசு. இதன்படி காங்கிரஸ் இயக்கமும் தடை செய்யப்பட்டு இருந்தது. நாடெங்கும் ஊர்வலங்கள், போராட்டங்கள், பொது கூட்டங்கள் தடை செய்யப்பட்டிருந்தது. அந்நாட்களில் பாதுகாப்பு சட்டம் என்று ஒன்று இருந்தது. இதன்மூலம் ஆங்கிலேய அரசின் ஆதிக்கமும் அடக்குமுறையும் எல்லை மீறியிருந்தது.
இந்த கட்டுபாட்டுகளை எல்லாம் மீறி திருப்பூரிலும் 1932ஆம் ஆண்டு ஜனவரி 10ந்தேதி ஓர் ஊர்வலம் நடைபெற்றது. தியாகி பி.எஸ்.சுந்தரம் அந்த ஊர்வலத்துக்கு தலைமை தாங்கினார். இவரது தலைமையில் திருப்பூர் குமரன், இராமன் நாயர், விசுவநாத ஐயர், நாச்சிமுத்து கவுண்டர், அப்புக்குட்டி, நாராயணன், சுப்பராயன், நாச்சிமுத்து செட்டியார், பொங்காளி முதலியார் ஆகியோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் திருப்பூர் வீதிகளில் தேசபக்த முழக்கங்களோடு சென்றது. ஊர்வலம் போலீஸ் நிலையத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த போது போலீஸ் நிலையத்திலிருந்து வெளியே வந்த போலீஸ்காரர்கள் ஊர்வலத்தில் ஈடுப்பட்டவர்களை தடியடியுடன் சரமாரியாக தாக்கினர். மண்டைகள் உடைந்தன. கை கால்கள் முறிந்தன.
திருப்பூர் குமரனின் தலையில் விழுந்த அடியால் மண்டை பிளந்தது. ரத்தம் பீறிட்டு கொட்டியது. ஆனாலும் உடல் சரிந்து தரையில் விழுந்தபோதும் அவர் கையில் பிடித்திருந்த பிடி தளரவேயில்லை. கையில் பிடித்திருந்த கொடிக்கம்பும் கொடியும் கீழே விழவேயில்லை. போலீஸ்காரர்கள் அவர்கள் அணிந்திருந்த பூட்ஸ் காலால் உதைத்தனர். சிலர் உடலின் மீது ஏறி மிதித்தனர். சுய நினைவை இழந்த குமரன் அப்போதும் அவரின் பிடி தளரவிடவேவில்லை.
கடைசி அவர் கொடி அவர் கைகளிலேயே இருந்தது. படுகாயமடைந்த குமரன் சிகிச்சை பலனின்றி அடுத்த நாள் அதாவது இதே ஜனவரி 11, 1932 அன்று உயிர் நீத்தார். அன்று முதல் குமாரசாமியாகவும், திருப்பூர் குமரமாகவும் இருந்த குமரன், "கொடி காத்த குமரன்" என்று அழைக்கப்பட்டார்.
-மைக்கேல்ராஜ்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu