கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலினிடம் கேள்வி கேட்ட பெண் மீது தாக்குதல்

கோவையில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலினிடம் எதிர்த்து கேள்வி கேட்ட பெண் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தேவராயபுரம் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார். தமிழகத்திலேயே கோவையில்தான் அதிக முறைகேடுகள் நடைபெறுவதாக ஸ்டாலின் குற்றச்சாட்டினார். மேலும் கிராம சபை கூட்டத்தை தடுத்தாலும், மக்களை சந்திப்பதை தடுக்க முடியாது என்றார். அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒருமுறை கூட கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை எனத் தெரிவித்தார். திமுக தேர்தல் அறிக்கையில் மிக முக்கிய அங்கமாக ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை இருக்கும். திமுக ஆட்சி அமைந்த பிறகு, விசாரணை நடத்தி தண்டனை வாங்கி கொடுப்பது உறுதி என ஸ்டாலின் பேசினார்.

ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போது, மைல்கல் சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த பூங்கொடி என்ற பெண் எதுக்கு கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். ஸ்டாலின் எந்த ஊராட்சியம்மா நீ என கேள்வி எழுப்பிய போது மைல்கல் சுகுணாபுரம் எனத் தெரிவித்தார். இதனையடுத்து வேலுமணி அனுப்பிய ஆளா? நீ போமா என ஸ்டாலின் கூறியவுடன் தொண்டர்கள் அப்புறப்படுத்தினர். இதனையடுத்து பூங்கொடியை வெளியே அழைத்து வரும்போது திமுகவினர் முதுகில் அடித்து இழுத்து வந்தனர். காவல்துறை பாதுகாப்போடு வெளியே வந்த அப்பெண் ஸ்டாலின் ஒழிக என கோசம் எழுப்பினார். திமுக தொண்டர்கள் அப்பெண்ணை ஆபாசமாக பேசியதோடு, பெண்ணுடன் வந்தவரை கீழே தள்ளி தொடர்ந்து அடித்தனர்.

இதனையடுத்து அப்பெண்ணிடம் உள்ளாட்சித்துறை அமைச்சர் தொலைபேசி வாயிலாக பேசும்போது , தன்னுடன் இரண்டு பேர் கோவிலுக்கு வந்ததாகவும், போகிற வழியில் ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவித்தார். அமைச்சர் தொண்டாமுத்தூர் தொகுதி முழுவதும் நல்லது செய்திருப்பதாகவும் அப்போது அமைச்சரை அவதூறாக பேசியதால் தாங்க முடியாமல், எதுக்கு கிராம சபை கூட்டம் நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பியதாக கூறினார். மேலும் தன்னை ஆயிரம் பேர் சேர்ந்து அடித்ததாகவும், காவல் துறை தன்னை காப்பாற்றியதாக தெரிவித்தார்.

மருத்துவமனையில் அப்பெண்ணை அனுமதித்தால் மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும் என காவல் துறையினர் துரிதப்படுத்தினர். அமைச்சரின் தூண்டுதலின் பேரிலேயே அதிமுகவை சேர்ந்த அப்பெண் ஸ்டாலினிடம் கேள்வி கேட்டிருக்கலாம் என திமுக தரப்பில் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை அடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் தொண்டாமுத்தூர் காவல் நிலையம் முன்பு ஸ்டாலினை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஸ்டாலினை கைது செய்ய வலியுறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!