தியாகி எஸ்.எஸ்.விஸ்வநாததாஸ்
நம் நாடு சுதந்திரம் பெற தங்களை முழுமையாக அர்பணித்த தியாகிகளில் குறிப்பிடத்தக்கவர் அமரகவி தியாகி விஸ்வநாததாஸ். 1886 ம் ஆண்டு ஜூன் 16 ல் சிவகாசியில் பிறந்தார்.
சிவகாசியிலும் அதன் சுற்று வட்டார கிராமங்களிலும் எங்கெல்லாம் நாடகம், கூத்து நடக்கிறதோ தொலைவை பொருட்படுத்தாமல் அவற்றைப் பார்க்கச் சென்றுவிடுவார். நாளடைவில் நாடகஅரங்கமே அவரின் கல்விக்கூடமாகியது. நாடகக்கலையில் தேர்ந்து சிறப்பினைப் பெற்றார்.
நாடக உலகின் இமயமலை என்றும் சிறப்பிக்கப் பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் விஸ்வநாதனின் திறமையையை வெளிக்கொண்டுவர நாடகத்தில், அறிமுகப் படுத்தினார்.
நடிப்பில் அனைவரையும் கவரும் வண்ணம் பல வித்தியாசமான வேடங்களில் நடித்தார். வேடத்திற்கு தக்க குரலும் உடல் மொழியும் இயல்பாகவே இருந்தது.. இவருக்கென ரசிகர் கூட்டம் பெருக ஆரம்பித்தது.
1911-ஆம் ஆண்டு துாத்துக்குடிக்கு காந்தி வருகை தந்தார். அப்போது நாடக மேடையொன்றில் பாடிய பாடல் மக்களையும் அங்கே இருந்த காந்தியையும் கவர்ந்தது. பெரும் மக்கள் கூட்டத்தை கவர்ந்திழுக்கும் விஸ்வநாததாஸ் திறமையை கண்டுவியந்த காந்தி அவரை சந்தித்து பாராட்டினார்.
"உன் திறமை நாட்டிற்கு பயன்படட்டும், தாய்நாட்டின் சுதந்திர பணியில் உன்னை அர்ப்பணித்துக் கொள்"என்று காந்தி வேண்டினார். தன்னுடைய இசைத்தமிழாலும், நாடக தமிழாலும் தேச உணர்வை ஊட்டி வந்த விஸ்வநாததாஸ் மேலும் தீவிரமாக பணியாற்ற தொடங்கினார்.
தான் மேடையேறும் ஒவ்வொரு நாடகத்திலும் தேசவிழிப்புணர்வு பாடல்களைப் பாடினார்.
அன்றைய காலகட்டத்தில் தமிழகத்தில் சுதந்திரபோராட்டங்களை முன்னெடுத்து நடத்திய தீரர் சத்தியமூர்த்தி, வ.உ.சிதம்பரம் பிள்ளை, காமராஜர் போன்றோரிடம் மிகவும் நெருங்கிப்பழகிய விஸ்வநாததாஸ் வீரம் மற்றும் விவேகத்துடன் வெள்ளைக்காரர்களை எதிர்த்துப் போராட தன்னுடைய நாடகத் திறமையை முழுமையாக பயன்படுத்தினார்.
தியாகி விஸ்வநாததாஸ் தனது உணர்ச்சி மிகுந்த நாடகங்கள் மூலம் மக்களிடையே சுதந்திர வேட்கையை வளர்த்தார்.
அந்நியப் பொருட்களை வாங்காமல் சுதேசி பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்று வ.உ.சி., சுப்பிரமணியசிவா மேடைகளில் முழங்கினார்கள், அந்த கருத்தை தான் நடித்த ஒரு நாடகத்தில் அரங்கேற்றினார் "அந்நியத் துணிகளை வாங்காதீர் உள்நாட்டுத் துணிகளை வாங்குவீர்…''எனப் பாடினார், அவரது பாடல் மக்களுக்கு சுதேச உணர்வு மேலிட்டது. பார்வையாளர் ஒருவர் தான் அணிந்திருந்த அந்நியத் துணியை கழற்றி மேடையிலேயே தீவைத்து எரித்தார். இதனை கண்ட விஸ்வநாததாஸ் தனது கதராடையை அவரிடம் தந்து அணியச் செய்தார்.
அவர் நடிக்கும் புராண நாடகத்தின் இடையே, சம்பந்தமே இல்லாமல், ஆங்கிலேயர்களை, சிலேடையாகவும், சமயங்களில் நேரடியாகவும் தாக்கி வசனம் பேசுவார். புராணம், சரித்திரம் என எந்த நாடகமாக இருந்தாலும் தேசபக்தி பாடல்களைப்பாடும்படி மக்கள் விஸ்வநாததாஸிடம் கேட்கஆரம்பித்தனர்.
சண்முகானந்தம் குரூப், என்ற நாடக கம்பெனியை நிறுவி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கும் சென்று நாடகம் போட்டார்.
வள்ளி திருமண நாடகம் அவரது நாடகத்தில் முக்கியமானது, அதில் கொக்கு பறக்குதடி பாப்பா பாடல் முக்கியமானது . முருகபெருமான் வேடனாக நடிக்கும் விஸ்வநாததாஸ் தாய் நாட்டை கொள்ளையடிக்கும் வெள்ளையனைப் பற்றி கொக்கு பறக்குதடி பாடலில் இரு பொருள்படும்படி வெள்ளையனை வசை படுவார்,
''கொக்கு பறக்குதடி பாப்பா - நீயும்கோபமின்றி கூப்பிடடி பாப்பா
கொக்கென்றால் கொக்குகொக்கு –அது நம்மைகொல்ல வந்த கொக்கு வர்த்தகம் செய்ய வந்த கொக்கு-நமது வாழ்க்கையைக் கெடுக்கவந்த கொக்கு! அக்கரைச் சீமை விட்டு வந்து - இங்கே கொள்ளைஅடிக்குதடி பாப்பா!''
கொக்கு அந்த வெள்ளை கொக்கு
என்று பாடியவுடன் எழுந்த பாமர மக்களின் கைதட்டல்களால் அரங்கம் அதிரம் கோசங்கள் முழங்கும் .
நெல்லையில் வள்ளி திருமண நாடகத்தில் கொக்கு பறக்குதடி பாப்பா பாடலைபாடுகிறார் விஸ்வநாததாஸ். முடிவில் மேடைக்கு வந்த போலிஸ் ஆங்கில அரசுக்கு எதிராக பாடியதால் உங்களைக் கைதுசெய்கிறோம் எனக் கூறினார்கள் ,
யாருக்கு வாரண்ட் எனக் கேட்க விஸ்வநாததாசுக்கு என காவலர்கள் பதிலளித்தனர். "இந்தப் பாடலைப் பாடியது நான் இல்லை, முருகப் பெருமான் வேடன் ரூபத்தில் வந்துபாடினார். எனவே முருகப்பெருமான் பேரில் வாரண்ட் கொண்டாங்க" என்று விஸ்வநாததாஸ் கூறியதும் குழம்பிப் போயினர் காவலர்கள். மிகவும் சாமர்த்திய கலைஞர் விஸ்வநாததாஸ். ஒவ்வொருமுறை அவருக்கு கைதுவாரண்ட் பிறப்பிக்கும் போதும் மிகுந்த எச்சரிக்கையுடனே வார்த்தைகளைக் கண்காணித்தது ஆங்கில அரசு.
தொடர்ந்து ஒலிக்கும் விஸ்வநாததாஸ் நாடக குரல் பிரிட்டிஷ் அதிகாரிகள் வெறுப்படைய வைத்தது, அவர்களின் நெஞ்சைத் துளைத்தது. "விஸ்வநாததாஸ் மேடைகளில் தொடர்ந்து ராஜ துரோக பாடலை பாடி வருகிறார். அவ்வாறு பாடுவதை அவர் நிறுத்தவேண்டும், இனி விஸ்வநாததாஸ் ஆங்கிலேயரைத் தாக்கியோ அல்லது இந்திய விடுதலை பற்றியோ மேடைகளில் பாடக்கூடாது என தடையாணை பிறப்பித்தது ஆங்கிலேய அரசு.
எதற்கும் அஞ்சாமல், "போலீஸ் புலிக்கூட்டம் நம்மேல் போட்டு வருகிறது கண்ணோட்டம்" என்றுபாடி ஆங்கில அரசை அதிரவைத்தார். இதனால் விஸ்வநாததாஸ் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருக்கும் பொழுது அவரின் மூத்த மகன் சுப்பிரமணிய தாஸ் மேடைகளில் தேசபக்திப் பாடல்களை தொடர்ந்துபாடினார். மகனையும் கைது செய்தனர்.
அப்பொழுதுதான் திருமணமாகியிருந்த சுப்பிரமணியதாஸிடம், "இனிமேல் தேசவிடுதலை பற்றி எந்த மேடையிலும் பேச மாட்டேன், பாடமாட்டேன் என்று எழுதிக் கொடுத்தால் உன்னை விடுதலை செய்கிறோம்'' என்றனர் ஆங்கில அதிகாரிகள். தனதுதந்தையிடம் இது பற்றி கருத்து கேட்டபோது கோபத்தோடு வெடித்த விஸ்வநாததாஸ்,"மகனே! நீமன்னிப்புகேட்டு மானமிழந்து மனைவியுடன் வாழ்வதை விட சிறையிலேயே மாவீரனாகச் செத்துவிடு". என்று கடிதம் அனுப்பினார்.
இந்த தேசத்தின் விடுதலைக்காக கிராமங்கள் தோறும் தேசபக்தி மணம் பரப்பி போராடியவர், அதற்காக இருபத்தொன்பது முறை சிறைச் சாலை சென்றார் . அவருக்கு 52 வயது ஆகிவிட்டாலும் நாடகத்தில் எழுச்சியூட்டும் நாயகனாகவே விளங்கினார்,
1940.. டிசம்பர் இறுதியில் விஸ்வநாததாசின் நாடகத்தை சென்னையில் ஐந்து நாட்கள் நடத்த ஏற்பாடு செய்தனர். அவரின் நாடகத்தை காண சென்னை வால்டாக்ஸ் சாலையிலே உள்ள ராயல் தியேட்டர் அரங்கில்,
வள்ளி திருமண நாடகத்தில், முருகனாக நடித்தார்.
அவர் பாடலைத் தணிக்கை செய்யவும், அவர் பாட தடை விதிக்கவும், ஆங்கிலேய போலீஸ் அதிகாரிகள் காத்திருந்தார்கள். நாடகம் முடியட்டும், அவரைக் கைது செய்யலாம், என்றிருந்தார்கள். முருகன் வேடமிட்ட தாஸ், ஆவேசமாக, அரக்கர்களை ஏசுவதைப் போல, ஆங்கிலேயர்களை வசை பாட ஆரம்பித்தார். கூட்டம் ஆர்ப்பரித்தது.
அடுத்த நிமிடம், ஆரவாரம் அடங்கியது. முருகன் அப்படியே மயில் மேல் சிலையாக இருந்தார். ஆம்! மயில் மேல் அமர்ந்து தேசபக்திபாடல்களைப் பாடிக் கொண்டிருக்கும் பொழுது அவரின் உயிர் பிரிந்தது.
டிசம்பர் 31, 1940.. அந்த நாடகத்திலேயே, அவர் உயிரும் பிரிந்து விட்டது. "என் உயிர் நாடக மேடையிலேயே போக வேண்டும்" என்ற அவரது விருப்பத்தை கடவுள் நிறைவேற்றி வைத்து விட்டார்.
1941-ஆம் ஆண்டின் துவக்கம், ஜனவரி 1-ஆம் தேதி மக்கள் வெள்ளத்தில் அவரது இறுதி ஊர்வலம் சென்னையில் நடைபெற்றது.
- முனைவர்.ப.பாலசுப்ரமணியன்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu