ஹைதராபாத் மருத்துவமனையில் ரஜினி டிஸ்சார்ஜ்

ஹைதராபாத் மருத்துவமனையில் ரஜினி டிஸ்சார்ஜ்
X

ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சைக்குப் பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அண்ணாத்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினி கலந்துகொண்டிருந்தார். படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தபோது, படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. நடிகர் ரஜினி தனிமைப்படுத்திக்கொண்ட நிலையில், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது.ஹோட்டலில் தங்கியிருந்த ரஜினிக்கு ரத்த அழுத்தம் அதிகமானதால், ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் கடந்த 25-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில், மருத்துவப் பரிசோதனைகள் முடிந்து நடிகர் ரஜினி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், உயர் ரத்த அழுத்தம் காரணமாகக் கடந்த 25-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால், சிகிச்சைக்குப் பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஏற்கெனவே அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டிருப்பது, ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்பு மற்றும் வயது ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு ரத்த அழுத்தத்தை சீராகக் கண்காணிப்பதுடன் ஒரு வாரம் முழுமையான ஓய்வு, மன அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் உடல் செயல்பாடுகளைத் தவிர்ப்பது.அதேபோல், கொரோனா தொற்று ஏற்படாமலிருக்கவும் உரிய முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும் அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story