கர்மா வழியில் ஜாதகம்
கர்மா என்ற சொல்லுக்கு செயல் என்று பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை உண்டு என்பது நியதி. ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் அதை 'கர்மா' என்கிறோம். அவரவர் வினைப்பயன் தான் கர்மவினை ஆகும். புரியும் படி சொல்ல வேண்டுமென்றால் நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினை செய்தால் துன்பம் தரும் இதுதான் நியதி, கர்மா, விதி.
இன்பமோ, துன்பமோ இல்லாமல் அமைதியான மனநிலையுடன்,தற்காலத்திலும், பிற்காலத்திலும், பிறருக்கும், நமக்கும், உடலுக்கும் மனதிற்கும் இன்பம் பயக்கும் செயலே புண்ணியம் எனப்படும். இந்த புண்ணியமும், பாவமும் சேர்ந்ததுதான் கர்மா எனப்படும். அந்த கர்மாவின் அடிப்படையில் ஒருவரது ஜனனம் தோன்றும் காலமும், ஜாதக கட்டமும் இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது.
ஒருவர் தன் வாழ்நாளில் நற்பலன்களை அனுபவிக்க, நிகழ்காலத்தில் கட்டுப்பாட்டுடன் வாழ்வதற்கு ஒரு முயற்சியாகவே, நம் முன்னோர்கள் ஆன்மிகம் மற்றும் மதம் சார்ந்த விஷயங்களை உபதேசித்து இருக்கிறார்கள். மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்மவினைகளை அனுபவிக்கிறான்.
சஞ்சித கர்மம், பிராப்த கர்மம், ஆகாமிய கர்மம் ஆகியவையாகும். இதில் 'சஞ்சித கர்மம்' என்பது, ஒரு கரு உருவாகும் போதே உடன் உருவாவது. அதாவது தாய், தந்தை, முன்னோர்களிடம் இருந்தும், பல ஜென்மங்களில் ஆத்மா செய்த பாவ புண்ணியங்களும் இந்த பிறவியில் பற்றிக்கொள்ளும்.
பிராப்த கர்மம்' என்பது, ஒரு ஆன்மா பல பிறவிகளில் செய்த பாவ புண்ணிய பலன் மூலம் இந்த பிறவியில் கிடைக்க கூடிய நன்மை தீமையாகும். இதையே வேறு விதமாக சொன்னால் 'பிராப்தம்', 'விதி', 'கொடுப்பினை' என்று கூறலாம். இந்த கர்மாவால் வரும் பலனையும் இந்த பிறவிலேயே அனுபவிக்கவேண்டும்.
'ஆகாமிய கர்மம்' மேற்கூறிய இரண்டு கர்மாக்களை கழிக்கச் செய்யும் செயல்கள் மூலம், இப்பிறவியில் வாழும் காலத்தில் ஆசைகளால் பிறருக்கு செய்யும் நன்மை தீமைகளால் வருவது.
இந்த மூன்று வகையான கர்மவினைகளில் இருந்து யாரும் தப்ப முடியாது. மனிதன் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், கடன்கள், பிரிவினைகள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத்தும் மேலே கூறிய கர்மவினை தாக்கத்தால் வருபவை.
கர்மங்கள் இருக்கும் வரை செய்து தான் ஆக வேண்டும். கர்மங்களை செய்து தான் தீர்க்க வேண்டுமே தவிர அதை கண்டு ஓடினால் பாவமே சேரும். கர்மங்கள் அனைத்தும் முடிக்க பட்ட உடன் அந்த மனிதன் மீண்டும் பிறவி எடுக்காத இறை நிலையை அடைய முடியும்.
நம் செய்கையை பற்றிய உற்றுநோக்குதல் நம்மிடம் இல்லாமல், தெய்வத்தை உணர்வதால், பெரிய பயன் ஒன்றும் கிட்டிவிடாது என்பதை உறுதியாகக் கூறலாம்.
ஒவ்வொரு பிரச்சினைக்கும் சில குறிப்பிட்ட பூஜை, வழிபாடு, விரத, பரிகார தலங்களும் உள்ளன. இவற்றையெல்லாம் முறையாக செய்வதன் மூலம் சிலருக்கு உடனே பலன் கிடைக்கலாம். ஒரு சிலருக்கு பலன் கிடைப்பது காலதாமதமாகும். ஒரு பிரிவினருக்கு பலனே கிடைப்பதில்லை. 'ஏன் சிலருக்கு பரிகாரம் பலன் தருவதில்லை?' நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், பரிகாரம் வேறு, வழிபாட்டு வேறு. ஆம் அதைப்பற்றி பார்ப்போம். பரிகாரம் என்பது ஜோதிடர் சொல்லியபடி நவகிரகங்களை சுற்றுதல், ஹோமம் , பூஜை செய்தல் எனலாம்,
வழிபாடு என்பது, 'தாங்கள் அனுபவிப்பது தங்களின் கர்மவினையின்படிதான்' நமது கர்ம வினைப்படியே நமக்கு நல்லதும், கேட்டதும் நடக்கிறது என்பதை உணர்ந்து நிகழ்காலத்தில் புதிதாக எந்த பாவங்களும் செய்யாமல், ஏற்கனவே செய்த பாவங்களின் விளைவாக வரும் பலன்களை குறைக்க, தான தருமங்கள் , ஆலய திருப்பணிகள், அன்னதானம், வறியவர்க்கு கொடுத்தல் போன்ற நல்ல செயல்களை செய்து இறைவனை மனதார வேண்டும் போது நிச்சயம் மனம் இரங்கி நமது தீய கர்மாக்களை போக்கியருள்வார். இறை நம்பிக்கையுடன் தர்ம காரியங்களைச் செய்து இறைவனின் கருணை தங்கள் மேல் விழுந்து பிறவா நிலையை அடைய முயற்சி செய்வது வழிபாட்டு முறையாகும். இது அனைவராலும் முடியும் எளிய முறையும் ஆகும்.
ஒருவரது ஜாதகத்தில் லக்னாதிபதி, பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி மற்றும் பாக்கியாதிபதி என்னும் தசை, புத்தி, அந்தர காலங்களில் செய்யும் பரிகாரங்கள் உடனடியாக பலன் கொடுக்கும். ஆறாம், எட்டாம், பன்னிரண்டாம் அதிபதிகளின் தசா புத்திகள், நீச்ச கிரக தசா புத்திகளில் செய்யும் பரிகாரங்கள் பலன் கொடுக்காது. சில சமயங்களில் காலம் தாழ்த்தி பலன் தரலாம். ஆக சாதகமான கிரக தசா, புத்தி காலத்தில் செய்யும் பரிகார பூஜைகள் தான் உரிய பலனைத் தரும்.
ஒருவரது முற்பிறவி வினைபயன் காரணமாகவே அவருக்கு ஜாதக கட்டம் இறைவனால் தீர்மானிக்க படுகிறது., இதை விதி என்று சொன்னாலும் அந்த விதியை மற்றும் மதி என்பது இறைவன் கருணையே. அதை பெற மேலே சொன்ன வழிமுறைகள் உதவும்.
அக நம் வாழ்நாளில் துன்பங்களை போக்கி நற்பலன்களை அனுபவிக்க வேண்டும் என்று நிகழ்காலத்தில் கட்டுப்பாட்டுடன் வாழ்வதற்கு ஒரு வழிமுறையாக நம் முன்னோர்கள் ஆன்மிகம் மற்றும் மதம் சார்ந்த வழிபாட்டு முறைகளை கொடுத்துள்ளார்கள்.
சிறு தவறு முதல் பெரும் குற்றங்கள் வரை, மனித வாழ்வின் அனைத்து சம்பவங்களும் கால பகவான் என்னும் கண்காணிப்பு கேமராவால் படம் பிடிக்கப்பட்டு, காலப் பதிவேட்டில் பதியப்படும் என்பதை உணர்ந்தவர்கள்
இறைவனின் முன் அனைவரும் சமம், நாம் செய்யும் அனைத்து செயல்களும் பதிவு செய்யப்பட்டு அதற்க்கு தகுந்தாற் போல எதிர் வினையாற்றும். இறைவனிடம் சரணாகதி அடைந்து, அவனது அருட் கருணையால் கர்மவினை நீங்கி சுப வாழ்வு வாழ்கிறார்கள்.
ஒருவன் ஒரு பரிகாரத்தை கடைப்பிடிக்க தொடங்கும் போதே, கர்மா அதன் வேலையை ஆரம்பித்து விடுகிறது. மனிதன் முக்தி அடைவதற்கும், பிறவாப் பெருநிலை அடைவதற்கும் 'சஞ்சித கர்மா' முற்றிலும் சரி செய்யப்பட்டு இருக்க வேண்டும். பிறவி எடுத்து சரி செய்வது என்பது முடியாத காரியம். 'சரணாகதி' என்னும் இறை வழிபாடே, சஞ்சித கர்மாவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
ஜாதகத்தில் எத்தகைய அமைப்பு இருந்தாலும், வழிபாட்டால் தீர்க்க முடியாத பிரச்சினைகளே கிடையாது. மனிதன் வாழ்வில் முன்னேற வேண்டுமானால் மனதை இறை நெறிப்படுத்த வேண்டும்.
கர்மா எனும் விறகு மலை போல குவிந்திருந்தாலும், ஞானம் எனும் நெருப்பு பற்றும் போது அவை இல்லாமல் நீங்கிவிடும் என பகவான் கிருஷ்ணர் கீதையில் வழி காட்டியுள்ளார். தீதும் நன்றும் பிறர் தர வாரா தமிழ் பாடல் உணர்த்தும் தத்துவமும் இதுவே. தர்மம் பெரிது. நன்மைகள் விளைய நல்லதே செய்வோம். கர்மா வழியில் ஜாதகத்தின் செயல்பாடுகளையும் விளைவுகளையும் வரும் நாட்களில் காண்போம்.
கட்டுரையாளர் :
- புலவர் நவமணி சண்முகவேலு, பாரம்பரிய ஜோதிட-வாஸ்து நிபுணர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu