நூலகக் கல்வி தரும் வேலை வாய்ப்பு
நூலகங்கள் அறிவுத் தேடலை நிறைவு செய்கின்றன. வாசிப்பும், வாசிப்பின் வழியே உருவாகிற சிந்தனையும் நம்மைப் சிறப்பானதொரு மேம்பாட்டிற்குத் கொண்டு செல்கின்றன.
வளர்ந்து வரும் தொழில் நுட்பம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப நூலகம் வளர்ந்து கொண்டே இருக்கும் ஒரு அமைப்பாகும்.
"ஒரு நூலகம் திறக்கப்படும் பொழுது நூறு சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன" - என்று மேல்நாட்டு அறிஞர் விக்டர் ஹியுகோ கூறியுள்ளார். அத்தகைய சிறப்பு மிக்க நூலகத்தை திறம்பட நடத்தும் பொறுப்பு ஒரு நூலகருக்கு உரியது. அந்த நூலகத்துறையை பயின்று, அதில் பணியாற்ற ஆர்வம் உள்ளவர்கள் வார வேண்டும்.
நூலகரின் பணிகள்:
நூலகம் என்றாலே, குவியலாக புத்தகங்களும், ஜர்னல்களும் இருக்கும் கட்டிடம் என்ற பழைய அடையாளம் தற்போது மாறிவிட்டது. எந்த நேரத்திலும், எந்த தகவலையும் கிடைக்க செய்வதுதான் தற்போதைய காலத்தின் தேவை என்கிற அளவிற்கு இன்றைய நிலை மாறியுள்ளது. ஒரு நூலகர் தன்னுடைய பழைய பணி சூழலிலிருந்து, தொழில்நுட்ப துணையுடன், அச்சு வளத்திலிருந்து ஆன்லைன் வளம் என்ற நிலைக்கு மாறி பணியாற்றும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம், இடநெருக்கடி சமாளிக்கப்படுகிறது. குறைந்த இடத்தில் அதிக பயன்விளைவுகள் ஏற்படுகின்றன. எனவே இந்த பணிக்கு, திறமையும், அறிவும் தேவைப்படுகிறது. எனவே இந்த துறையில் பல சிறப்பு படிப்புகள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளன.
நூலகப் படிப்பு:
லைப்ரரி மற்றும் இன்பர்மேஷன் சயின்ஸ் என்பது ஒரு பட்டப்படிப்பு. இந்த படிப்பானது, முதுநிலையில் நாடு முழுவதும் உள்ள பல்கலைகளில் கற்பிக்கப்படுகிறது. முதுநிலை படிப்பு 2 வருட கால அளவு கொண்டது, இதைப் படிக்க ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த படிப்பிற்கான பாடத்திட்டத்தில், நூலக நிர்வாகம் (பெறுதல் மற்றும் சரிபார்த்தல் உள்ளிட்டவை), வரவு-செலவு திட்டம், நிர்வாகமேலாண்மை , அட்டவணைப்படுத்துதல், நெட்வொர்கிங், ஆட்டோமேஷன், தகவல் மூலங்கள், நூல்களை பாதுகாத்தல், ஆராய்ச்சி முறைமை, பொது நூலகம் மற்றும் பள்ளி, கல்லூரி , பல்கலைகழக நூலகம் உள்ளிட்ட பல பிரிவுகள் அடங்கியுள்ளன.
உயர்கல்வியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் தகவல் அமைப்பு, அறிவுசார் அமைப்பு, வரிசைப்படுத்தல் மற்றும் வகைப்படுத்தல் போன்ற பிரிவுகளில் ஆழமான பாடங்கள் உள்ளன. மேலும், மேம்படுத்தப்பட்ட நூலக வரிசைப்படுத்தல் (புத்தகமல்லாத பொருட்கள்), மேம்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், ஆராய்ச்சி மற்றும் புள்ளியியல் முறைகள், நூலக மற்றும் தகவல் சேவைகளை சந்தைப்படுத்தல், தகவல் சேகரிப்பு மற்றும் மீட்கொணர்தல் மற்றும் பொது நூலகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்கள், கல்வி நிறுவன நூலகம், ஆராய்ச்சி நூலகம், மருத்துவ அறிவியல் நூலகம், வேளாண் அறிவியல் நூலகம் மற்றும் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நூலகம் பற்றிய பிரிவுகளும் உள்ளன.
வளர்ச்சி மற்றும் சம்பளம்:
நூலக அலுவலர் என்பவர் மற்ற துறை நிபுணர்களுடன் சமமாக மதிக்கப்பட வேண்டிய ஒருவர். ஒரு பல்கலைக்கழகத்தை பொறுத்தளவில், தலைமை நூலகர் என்பவர், பேராசிரியருக்கு சமமானவர் மற்றும் பேராசிரியருக்கு நிகரான ஊதியமும் பெறுகிறார். துணை நூலகர் என்பவர் இணை பேராசிரியருக்கு சமமாக கருதப்படுகிறார். உதவி நூலகர் என்பவர் கல்லூரி நூலகருக்கு இணையானவர் .
இத்துறையில் பயின்று பட்டம் பெற்று, பெரிய கார்பரேட் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பெரும் சம்பளம் மிக அதிகம்.
கல்வித்துறையில் உள்ள வாய்ப்புகள்:
இன்றைய நிலையில் புதிதாக நூலக அறிவியல் படிப்பை முடித்து வெளிவரும் இளைய தலைமுறையினருக்கு அதிகளவில் இருக்கும் பள்ளி, கல்லூரி மற்றும் பலவிதமான கல்வி நிறுவனங்களில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. மேலும் நூலக அலுவலர்களின் சேவையை சார்ந்திருக்கும் ஒரு அறிவு தொகுப்பை உருவாக்கும் திட்டம் அரசுக்கு உள்ளது. இதைத்தவிர, சட்டம், ஹோட்டல் மேனேஜ்மென்ட், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் பாடரீதியான நூலகங்கள் அதிகரித்து வருகின்றன.
சட்டத்துறையில் பணிபுரியும் ஒரு நூலக அலுவலர், நூலக அறிவியலோடு, சட்டப் படிப்பையும் முடித்திருக்கலாம். அதேசமயத்தில், மருத்துவ துறையில் பணிபுரியும் நூலகர், அறிவியல் படிப்பில் நன்கு புலமை பெற்றிருக்க வேண்டும்.
கார்பரேட் துறை வாய்ப்புகள்:
இன்றைய நிலையில் பல நூலகர்கள், பாரம்பரிய நூலகம் மட்டுமின்றி, டேட்டாபேஸ் மேம்பாடு, ரெபரன்ஸ் டூல் மேம்பாடு, இன்பர்மேஷன் சிஸ்டம், பப்ளிஷிங், இன்டர்நெட் ஒருங்கிணைப்பு, மார்கெடிங், வெப் கன்டென்ட் மேலாண்மை மற்றும் வடிவமைப்பு, மற்றும் அறிவு மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் தங்களின் தகவல் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி திறன்களை பயன்படுத்துகிறார்கள்.
கார்பரேட் உலகில், கம்பெனிகள், அதிகபட்சமான தகவல்களை சேகரிக்கவேண்டியிருக்கிறது. எனவே அவற்றுக்கு ஒரு விரிவான கன்டென்ட் மேலாண்மை அமைப்பு தேவைப்படுகிறது. உதாரணமாக, வங்கி துறையில் மிகப்பெரிய தகவல் மேலாண்மை தேவைப்படுகிறது. எனவே இத்தகைய வேலையை செய்ய, சரியான முறையில் அதிகப்படியான தகவல்களை ஒருங்கிணைக்கும் திறன் வாய்ந்த நிபுணர்களால் மட்டுமே முடியும். எனவே நூலக அலுவலர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கார்பரேட் துறையில் உள்ளது.
தென் தமிழகத்தில் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் (லைப்ரரி சயின்ஸ்) படிப்புகளில் சேர்ந்து படித்து பயன்பெறலாம்.
சான்றிதழ் படிப்புக்கு (C.LIB.I.SC) பிளஸ்-2 தேர்ச்சியும்,
முதுநிலை நூலகவியலுக்கு (M.Lib.I.Sc) படிப்புக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பும்,
முனைவர்பட்ட ஆய்வாளராக நூலக அறிவியலில் முதுநிலையில் 55% மதிப்பெண்ணுடன், முனைவர்பட்ட தகுதிதேர்வில் வெற்றிபெற வேண்டும்.
கட்டுரையாளர் :
- முனைவர்.ப.பாலசுப்ரமணியன்,
நூலகர் மற்றும் நூலக அறிவியல் துறைத்தலைவர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம்,
திருநெல்வேலி.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu