தீபம் நா.பார்த்தசாரதி

தீபம் நா.பார்த்தசாரதி
X
தீபம் நா.பார்த்தசாரதியையும், அவர் ஆசிரியராக இருந்து நடத்திய "தீபம்" இதழையும் தமிழுலகம் நன்றாக அறியும், எழுத்துலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்து நல்ல தமிழில் எழுதியவர் , அவருடைய பிறந்த நாள் இன்று

தீபம் நா.பார்த்தசாரதியையும், அவர் ஆசிரியராக இருந்து நடத்திய "தீபம்" இதழையும் தமிழுலகம் நன்றாக அறியும், எழுத்துலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்து நல்ல தமிழில் எழுதியவர் , அவருடைய பிறந்த நாள் இன்று. விருது நகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த நதிக்குடி கிராமத்தில் 1932 ஆம் ஆண்டு டிசம்பர் 18 இல் பிறந்தார். சாகித்ய அகாதமி பரிசு பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் இவர் முக்கியமானவர்.


சுமார் 40 புதினங்களும், சிறுகதைகள், சிறுகதைத் தொகுதிகள், கவிதை கட்டுரை ஆய்வுநூல்கள் என்று மொத்தம் 93 நூல்களை எழுதியுள்ளார்.

"குறிஞ்சிமலர்", "சமுதாய வீதி", "பொன் விலங்கு", "நித்திலவல்லி", "பாண்டிமாதேவி", "சத்திய வெள்ளம்" போன்ற புதினங்கள் மிகப் பெருமளவில் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றவைகள்.

இவரது படைப்புகளில் சுயமுன்னேற்றச் சிந்தனைகள், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள் மிகுந்திருக்கும். இவரது பல நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இவரது புதினங்கள் பல தொலைகாட்சி தொடராகவும் வந்தது. வாசகர்கள் பலர் அவரது புதினங்களில் உள்ள கதை மாந்தர்கள் பெயர்களை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டினார்கள்.

தனக்கு கடிதம் எழுதும் வாசகர்களுக்கு தன் கைப்பட உடனடியாக கடிதம் எழுதும் வழக்கம் கொண்டவர்.

அடிப்படையில் இவர் ஒரு தமிழாசிரியர். பாரதியார் ஆசிரியராய் இருந்த மதுரை சேதுபதிப் பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றினார். கல்கி இதழின் ஆசிரியர் சதாசிவத்தின் அழைப்பின் பேரில் அதன் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். .

கல்கி இதழில் உதவி ஆசிரியராக பணியாற்றி இவர் 1965 இல் அதிலிருந்து விலகி சொந்தமாக தீபம் என்ற மாத இதழை ஆரம்பித்தார். ஆசிரியராகவும் நிர்வாகியாகவும் இருந்து 23 ஆண்டுகள் அதை நடத்தினார்.

இவர் பல அயல்நாடுகளுக்கும் பயணம் சென்று அது குறித்தெல்லாம் தொடராக பல பயணக் கட்டுரைகளை எழுதினார் . அவை 'புது உலகம் கண்டேன்', 'ஏழு நாடுகளில் எட்டு வாரங்கள்' என்ற பெயரில் நூல்களாக வந்தன.

1979ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் நடத்திய தினமணி கதிர் இதழின் ஆசிரியராகவும் இவர் பணியாற்றினார்.

பின்னர் சுதந்திர எழுத்தராக (freelance writer) செயல்பட ஆரம்பித்தார்.

இவரது சமுதாய வீதி என்னும் நெடுங்கதைக்காக சாகித்ய அகாதமி பரிசு பெற்றார். துளசி மாடம் என்னும் நெடுங்கதைக்காக ராஜா சர் அண்ணாமலை பரிசு பெற்றார். இந்த இரண்டு நூல்களும் இன்றளவும் வாசகர்கள் மத்தியில் அதிகம் விற்பனையாகும் நூலாகும்.

இவர் ஏராளமான புனைபெயர்களையும் சூட்டிக்கொண்டு எழுதி வந்தார். எழுதும் விஷயத்துக்கேற்ப இவருடைய புனைபெயர்களும் பொறுத்தமாக அமையும்.

இவருடைய கதைகளை வரலாற்று புதினமாக எழுதினாலும் அதில் சமகாலத்தில் வாழும் மக்களின் பிரச்சினைகளை எடுத்து கூறும். சங்க கால இலக்கியத்தில் காணப்பெறும் காதல் காட்சிகளைப் போல இவருடைய கதைகளில் அழமான சிந்தனைகளும், மனம் ஈர்க்கும் கருத்துக்களும் இருக்கும்.

1987 ம் ஆண்டு இதய நோயால் பாதிக்கப்பட்டு 55-வது வயதில் மறைந்தார் இவருடைய படைப்புகள் ஏராளமானவை இலக்கியத் தரத்தோடும், ஆழ்ந்த நற்சிந்தனைகளோடும் படிப்பவர்களுக்கு இன்றளவும் வழிகாட்டுகின்றன.

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!