கோதையின் திருப்பாவையும் நோன்பு முறையும்
தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னி பெண்கள் பாவை நோன்பு ஏற்பது வழக்கம். மார்கழி மாதம் அதிகாலை எழுந்து நீராடி, வீட்டின் முன் கோலம் போட்டு, இறைவனை துதித்து வழிபடுவது வழக்கம்.
இதனை பின்னணியாக கொண்டு இயற்றப் பெற்றது தான் திருப்பாவை. ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்கள் தான் நோன்பு காலத்தில் பாடப்படுகிறது.
பெண்கள் பாவை நோன்பு இருப்பது தமிழகத்தின் தொன்மை வழக்கமாக இருந்தது. பாவை நோன்புக்கு அடிப்படை தமிழ் நாட்டின் பழைய வழக்கத்தை தழுவியது. இந்த நோன்பு சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றிணை, பரிபாடல்களில் பாவை நோன்பும் தைந்நீராடலுமாகக் குறிப்பிடப்படுகிறது.
கண்ணனை அனுசரித்த பெண்ணாக தன்னை பாவித்துக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்ப்பாடியாகக் கொண்டு வடபெரும் கோயிலை நந்தகோபர் மாளிகையாகவும் அதில் உள்ள தெய்வத்தை கிருஷ்ணனாகவும் பாவித்து அந்தப் பெண்கள் செய்த பாவை நோன்பை ஆண்டாள் தான் செய்வதாக பாவித்து பாடிய முப்பது பாடல்களில் இராமானுஜருக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அதனால் அவரை திருப்பாவை ஜீயர் என்று சிறப்பித்து அழைத்தனர்.
அன்றைய காலத்தில் ஒரு பெண் தன் தோழிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பாடிய பாவை பாடல்கள் பற்றி அறியும் போது வியப்பை தருகிறது. அந்த சமயம் ஆண்டாளைப் பற்றி யோசிக்கும்போது பதின் பருவ பெண்ணாகவோ, கண்ணனையே கணவனாக நினைந்து அவனுக்கு வாழ்க்கைப்பட பிடிவாதம் செய்கின்ற பெண்ணாகவோ மட்டும் நினைக்க முடியாது.
திருப்பாவை முப்பது பாடல்களையும் படிக்கும் போது ஆண்டாள் பெரும்பாலும் தன் தோழிகளையும், உறவினர்களையும், இறுதியில் கண்ணனையும் துயிலெழுப்புவதாக பாடுகிறார். அந்த பாடல்களிள் பக்தியின் மேன்மை, கற்பனை, இலக்கியச் செறிவு, விஞ்ஞான தத்துவம், தேர்ந்த புலமையும், சிந்தனை நம்மை பிரமிக்க வைக்கின்றன. திருப்பாவை மிகக் கடினமான 'இயற்றர வினை கொச்சகக் கலிப்பா' வகையைச் சேர்ந்தது. ஆண்டாளின் திருப்பாவைப் பாடல்கள் தன்னிகரில்லாதவையாகும்,
7 ஆம் நூற்றாண்டில் ஒரு பதின்பருவ பெண்ணுக்கு இவ்வளவு தெரிந்திருக்கிறது என்பதையும், இப் பாசுரங்களின் பெருமையை உணர்ந்த வசுமதி என்பவர் ஆண்டாளின் திருப்பாவையை பிரெஞ்சில் மொழி பெயர்த்தார். 'Le Tiruppavai ou Le chant matinal de Margali' என்னும் இந்த நூலை பாரிசின் எடிசன்ஸ் பான்யன் பதிப்பகம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. இவர்களது மகத்தான பணியால் பிரெஞ்சு மொழி பேசும் மக்களால் தமிழையும் ஆண்டாளையும் அறிய முடிந்தது.
ஆண்டாளின் பாவை நோன்புக்காக கடைபிடிக்கும் நியமனங்கள் எளிமையானவை. எல்லாப் பெண்களும் கடைப்பிடிக்கக் கூடியவையாக உள்ளன.
நெய்யுண்ணோம்; பாலுண்ணோம்; நாட்காலை நீராடி
மையிட் டெழுதோம்; மலரிட்டு நாம் முடியோம்;
செய்யா தனசெய்யோம்; தீக்குறளைச் சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோ ரெம்பாவாய்.
நோன்பினை நோற்கும் மகளிர், சில விதிமுறைகளைக் கடைபிடித்து ஒழுகினர் என்பதை, ஆண்டாள் அருளிய திருப்பாவையின் வாயிலாக அறியமுடிகிறது.
"நெய் கிடையாது, பால் கிடையாது, கண்ணுக்கு மை கிடையாது. கூந்தலுக்கு மலர் கிடையாது. செய்யக்கூடாத காரியங்களைச் செய்ய மாட்டோம், கோள் சொல்ல மாட்டோம் அதிகாலையில் குளித்துவிட்டு தகுந்தவர்களுக்குப் பொருளும் பிச்சையும் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு கொடுப்போம். இப்படி நல்லவற்றை எண்ணி மகிழ்வது எம் பாவை நோன்பு. பொழுது விடிவதற்குரிய அறிகுறிகளாக கீழ்வானம் வெளுப்பதும், பறவைகள் ஒலிப்பதும், கோழி கூவுவதும், முனிவர்களும் தேவர்களும் துயிலெழுந்து எம்பெருமானின் பெயரை முழங்குவதாகவும் விடியல் பொழுதின் அடையாளங்களாகக் குறிப்பிடும் ஆண்டாள், அதற்கெல்லாம் முன்பாகவே எழுந்து விரத நியமத்தை முடிக்கவேண்டி, ஆயர்பாடிப் பெண்களைத் துயிலெழுப்புகிறாள் அதற்காகத் தோழிகளை எழுப்பி நீராட அழைக்கும் காலை நேரப் பாடல்களில் இருக்கும் நுட்பமான விளக்கங்கள் நம்மை வியக்க வைக்கின்றன.
"என்னையே சரணடை" என்று பகவத் கீதையில் கண்ணன் கூறும் சரணாகதி தத்துவத்தை தன் பாடல் முழுவதும் விளக்கியுள்ளார் ஆண்டாள், அவள் பாடிய பாடல்கள் திருப்பாவை 30 பாடல்களும், கொண்ட நாச்சியார் திருமொழி 143 பாடல்களும் அவளது அவதார நோக்கத்தை நிறைவு செய்தது. சரணாகதி தத்துவத்தை வலியுறுத்தும் வகையில் ` பறை தருவான்' என்று உறுதிஇட்டு கூறுகிறாள்.
பெண்களை , நீங்கள் வெறும் போகப் பொருள்களல்ல; பகவானையே எழுப்பி நீங்கள் விரும்பும் பறையைக் கேட்கலாம். புறத்தூய்மையாலும் அகத்தூய்மையாலும் அவனை அடைய உங்களால் முடியும் என்று பாடி எழுப்பும் பாசுரங்கள் நம்மை அறியாமையாகிய தூக்கத்தில் இருந்து மெய் ஞானமாகிய விழிப்பு நிலைக்கு அழைத்து செல்லும்.
ஆண்டாளின் பாடல்கள் தெய்வீகத்தன்மை கொண்டவை என நம்பப்படுவதால், மழை வேண்டி பாடப்படும் ஆழிமழைக் கண்ணா என்ற திருப்பாவைப் பாடல் இன்றும் மழை வேண்டி கோடைக் காலங்களில் பாடப்படுகிறது. ஆண்டாள் நான்காவது திருப்பாவையில் ஓர் அற்புதமான மழைக்காட்சியும் விஞ்ஞானக் குறிப்பும் வைத்து பாடியது இன்று அனைவரையும் வியக்க வைக்கிறது.
மழை எப்படிப் பொழிகிறது என்ற அறிவியல் நுட்பத்தைத் தம் பாசுரத்தில் புகுத்தி, அதற்குக் காரணன் கண்ணனே என்று கூறி, அனைவரும் அவனைப் பிரார்த்தனை செய்யப் பணிக்கிறார் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் மழை எப்படிப் பெய்கிறது என்று ஆண்டாள் விவரிக்கும் இந்த கருத்தை இன்றைய வானிலை நிபுணர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள்.
கவிதைத் திறமையால் திருமாலின் கரிய உடல் சங்கு சக்கரம் இவைகளோடு மழையை ஒப்பிட மற்றதில் மழை பெய்வதின் இயற்கையான விளக்கத்தைத் தப்பில்லாமல் தருகிறார்.
கண்ணன் மேல் ஆசைப்பட்டு, அவனை விரும்பிப் பாவை நோன்புற்று ஆண்டாள் பாடிய 'வாரணமாயிரம் சூழ வலம் செய்து' என்று துவங்கும் நாராயணனுடைய திருமந்திரத்தைப் பற்றிய பாசுரங்களை இன்று வரை தெலுங்கினைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் ஆந்திராவில் பாடுகின்றனர். ஆந்திரத் திருமலையில் திருக்கல்யாண உற்சவத்தின்பொழுது, ஆண்டாளின் வாரணமாயிரம் என்ற தமிழ் பாசுரம் பாடப்படுகிறது, பேரரசர் கிருஷ்ண தேவராயர் இயற்றிய தெலுங்குக் காப்பியமான 'ஆமுக்த மால்யதா' (சூடிக்கொடுத்த சுடர்க்கொடி) மிகவும் குறிப்பிடத்தக்கது.
ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாடல்களும் 'சங்கத் தமிழ்மாலை' என்று போற்றப்படுகின்றன. ஆண்டவனையே ஆள நினைத்து, பாடியதால் 'ஆண்டாள்' என்றும், இவள் சூடிக்கொடுத்த மாலைகளையே அரங்கன் விரும்பி அணிவதால் 'சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்றும், இறைவனைக் குறித்து நாச்சியார் திருமொழி இயற்றியதால் 'கோதிலாக் கோதை நாச்சியார்' என்றெல்லாம் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறாள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu