சிறப்பு மிக்க மார்கழி மாதம்
சூரிய பகவான் வடதிசையிலிருந்து தென்திசை நோக்கி பயணம் செய்யும் காலமே தட்சிணாயன காலமாகும். தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது. மார்கழி மாதம் அதிகாலை எழுந்து கோலம் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்பதை காணலாம்.
அடுத்து சூரிய பகவான் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயனம் எனப்படும். தை மாதம் முதல் தேதியன்று சூரிய பகவானின் உத்தராயன காலம் ஆரம்பமாகிறது, அதை மகர சங்கராந்தி என்று தை திருவிழாவாக கொண்டாடுகிறோம்.
மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கான கால கணக்கில் ஒரு நாள் ஆகும். தை முதல் ஆனி வரையுள்ள உத்தராயன காலம் பகலாகவும், ஆடி முதல் மார்கழி வரையுள்ள தட்சிணாயன காலம் இரவாகவும் இருக்கும். இதன்படி தேவர்களுக்கு இரவுக் காலம் முடிகிற வைகறைப் பொழுது, மார்கழி மாதமாகின்றன. மார்கழி மாதம் தேவர்களுக்கு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள இரண்டு மணி நேரத்தைக் குறிக்கும். அதாவது தேவர்களுக்கு இந்தக மாதம் பிரம்ம முகூர்த்தம் ஆகும். எனவே மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம் என்று வைத்து இறைவனை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டது.
"மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்" என்றும் "மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!" என்றும் கீதையில் கிருஷ்ணர் குறிப்பிட்டுள்ளார்.
ஆண்டாள் மார்கழி முப்பது நாட்களும் பாவை விரதம் இருந்து நாள்தோறும் வைகறையில் எழுந்து ஒவ்வொரு பாசுரமாகப் பாடி, திருமாலை திருப்பாவையால் பாடித் தொழுது, திருமணம் புரிந்தது சிறப்பு மிக்க மார்கழி மாதத்தில் தான்.
இந்த மாதத்தில் அதிகாலையில் எல்லா ஆலயங்களிலும் வழிபாடுகள் தொடங்கிவிடும். சிதம்பரத்தில் மார்கழி மாதத்தில் நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் தமிழ் நாட்டில் மிக முக்கியம் ஆகும். சிவாலயங்களில் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சியும், விஷ்ணு ஆலயங்களில் திருப்பாவையும் பாடப்படும். சூரிய உதயத்திற்கு முன்னதாகவே மங்கள வாத்தியங்கள் ஒலிக்க பூஜை, ஆராதனை நடத்தப்படும்.
இப்படி இறைவழிபாட்டிற்கு என ஒதுக்கிய இம்மாதத்தில் திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்கள். பீடை நிறைந்த மாதம் என்று சொல்லுவார்கள். 'பீடு' என்றால் 'பெருமை' என்று பொருள், அதனால் தான் பீடுடைய பிரம்மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே" என்று சிவனை போற்றினார்கள். இப்படி பீடு (பெருமை) நிறைந்த மாதம் என்பதே மருவி 'பீடை' என்றானது.
சிறப்பு மிக்க இந்த மார்கழி மாதத்தில் இறைவனை எண்ணத்தால் துதித்துப் போற்றுவோம். தொற்று நோய்கள் உட்பட எல்லா துயரங்களும் நீங்கி நல்ல வழியாக தை பிறக்கட்டும் .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu