நிச்சயம் அவர் பதக்கம் பெறுவார்..! வினோத் போகத் பற்றி மக்கள் கருத்து..!
தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத். அவரது மாமாவும் முன்னாள் மல்யுத்த பயிற்சியாளருமான மகாவீர் போகத்.
வினேஷ் போகத் மல்யுத்தத்தில் தங்கப்பதக்கம் வெல்வார் என ஒட்டுமொத்த இந்தியாவுமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த நேரத்தில் இறுதிப்போட்டிக்கு முன்பாக தகுதிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதன்மூலம் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பையும் இழந்திருக்கிறார்.
வினேஷ் போகத் மல்யுத்தத்தில் ஃப்ரீ-ஸ்டைல் 50 கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு ஆடி வந்தார். சிறப்பாக செயல்பட்டு வந்த அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். இதன் மூலம் பதக்கத்தையும் உறுதி செய்தார். நடைபெறவிருந்த இறுதிப்போட்டியில் தங்கப் பதக்கம் வென்று விடுவார் என்று அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணமிருந்தன.
இந்நிலையில் தான் வினேஷ் போகத் பரிசோதனையின் போது அவர் இருக்க வேண்டிய 50 கிலோவை விட 100 கிராம் அதிக எடையோடு இருப்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்திலும் மத்திய விளையாட்டுதுறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியிருக்கிறார். " இதுவரை வீழ்த்த முடியாத வீராங்கனையாக வினேஷ் போகத் இருந்தார். பிரதமர் மோடி இந்திய ஒலிம்பிக் கமிட்டி தலைவருடன் பேசியிருக்கிறார்.
அவருக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் எங்களது தரப்பில் இருந்து கண்டனங்களைத் தெரிவித்து இருக்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் வினேஷ் போகத்துக்கு ஆதரவாகப் பலரும் பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் வினேஷ் போகத்தின் மாமாவும் முன்னாள் மல்யுத்த பயிற்சியாளருமான மகாவீர் போகத் தகுதி நீக்கம் குறித்து பேசியிருக்கிறார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. வினேஷிடம் இருந்து தங்கத்தை நாடே எதிர்பார்த்தது. போட்டியில் விதிகள் உள்ளன. ஆனால் ஒரு மல்யுத்த வீரர் 50-100 கிராம் அதிக எடையுடன் இருந்தால் வழக்கமாக அனுமதிப்பார்கள். வேதனையடைய வேண்டாம் என மக்களைக் கேட்டுக் கொள்கிறேன். ஒரு நாள் அவர் நிச்சயம் ஒரு பதக்கத்தைக் கொண்டு வருவாள். அடுத்த ஒலிம்பிக்கிற்கு அவரைத் தயார் செய்வேன்" என்று கண்ணீர் மல்க பேசியிருக்கிறார். இதே கருத்தை பலரும் தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்தநிலையில் வினேஷ் போகத் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu