பாளை வ.உ.சி மைதானத்தின் முன்னாள் பெயர் தெரியுமா? வரலாறு அறிவோம் வாங்க..!
வ.உ.சி மைதானம் (கோப்பு படம்)
சமூக வலைதளங்களில் வந்த ஒரு அற்புதமான பதிவு. இதனை எங்கள் இன்ஸ்டா நியூஸ் வாசகர்களுக்காக வழங்குகிறோம். விஷயம் இது தான்.
அந்த இளைஞன் முனைஞ்சிப்பட்டி கிராமத்தில் இருந்து படிப்பதற்காக பாளையங்கோட்டைக்கு வந்திருக்கிறான். பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெருவில் வாடகைக்கு குடியிருந்து கொண்டு, தூய சவேரியார் கல்லூரியில் இண்டர்மீடியட் படிப்பு படிக்கிறான். அவன் இருக்கும் தெருவில் இருந்து தினமும் அந்த மைதானத்தைக் கடந்து செல்கிறான். அந்த மைதானத்தின் பெயர் அவனது மனதில் அரித்துக்கொண்டே இருக்கிறது.
மைதானத்தின் பெயர், கர்சன் மைதானம். வங்கப்பிரிவினையை உண்டாக்கிய வெள்ளைக்கார கர்சன் பிரபுவின் பெயரில், நம்மூரில் ஒரு மைதானமா? என்று அவனது மனதில் குமுறல். சுதந்திரப்போராட்டம் கனல் கொண்ட நேரமல்லவா? அவனுக்கு அப்போது காங்கிரஸ் இயக்கத்தின் மீது இயல்பாகவே ஒரு பற்றுதல் இருந்த நேரம் அது. எனக்கு மட்டும் அதிகாரம் வாய்க்கும் என்றால், இதன் பெயரை மாற்றி, இந்த தேசத்தின் தன்னலமற்ற ஒரு தலைவர் பெயரை சூட்டி மகிழ்வேன் என்று மனதிற்குள் நினைத்தபடியே அந்த மைதானத்தைக் கடந்து போனான். இது நடந்தது சுமார் 1935ம் ஆண்டு காலகட்டத்தில்.
காலம் மாறும் அல்லவா ? அந்த இளைஞன் காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாய் தன்னை இணைத்துக் கொண்டான். 1951ம் ஆண்டில் பாளையங்கோட்டை கவுன்சிலராகத்தேர்வு செய்யப்பட்டான். அதே ஆண்டில், பாளையங்கோட்டை முனிசிபல் தலைவராக ஆனான். அவன் கனவை இறுதியில் நிறைவேற்றியே விட்டான். கர்சன் மைதானம் என்று இருந்ததை வ.உ.சி மைதானம் என்று பாளையங்கோட்டை நகராட்சியில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து பெயரை மாற்றினான். இன்று பாளையங்கோட்டை நகருக்கு அழகு சேர்க்கும் மகத்தான வ.உ.சி.மைதானம் இவ்வாறே பெயர் மாற்றம் பெற்றது.
அது சரி. யார் அந்த இளைஞன்? அவன் பெயர் மகராஜப்பிள்ளை. 1951 முதல் 1967 வரை பாளையங்கோட்டை நகராட்சியின் சேர்மன் பதவி வகித்த மகராஜாபிள்ளை. பாளையங்கோட்டை புறநகர் பகுதியை நிர்மாணம் செய்ததில் முக்கியப் பங்கு வகித்தவர். அவரால் உருவாகப்பட்ட மகராஜாநகருக்கு அவரது பெயரையே சூட்டி விட்டார்கள்.
அவரால் உருவாக்கப்பட்டது மகராஜாநகர். அவரது காலத்தில் கட்டப்பட்டது ஹைகிரவுண்டு அரசு மருத்துவமனை, அவரால் உருவாக்கப்பட்டது பாளை அரசு ஊழியர் குடியிருப்பு. குழந்தைகளுக்கு கலைநிகழ்ச்சிகள் நடத்த நேருஜி கலையரங்கம் உருவாக்கியவர் இவரே.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu