ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடக்கம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக தொடங்கியது. ஜப்பான் அரசர் நருஹிட்டோ, பிரதமர் யோஷிஹிடே, ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் பங்கேற்றுள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கியது. இன்று தொடங்கும் ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த வருடம் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் இன்று மாலை கோலாகலமாக தொடங்கியது. ஒலிம்பிக் போட்டியை ஜப்பான் பேரரசர் நருஹிட்டோ தொடங்கி வைக்கிறார்.
இந்தியா சார்பில் 6 அதிகாரிகளும் 19 வீரர்-வீராங்கனைகளும் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர். ஒலிம்பிக்கில் கலந்து கொள்ள இந்தியாவிலிருந்து 127 வீரர்-வீராங்கனைகள் சென்றுள்ளனர். ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் அதிகபட்ச வீரர்-வீராங்கனைகள் இவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 18 போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதில் துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், குத்துச் சண்டை, வில் வித்தை, ஹாக்கி போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மொத்தம் 205 நாடுகளில் இருந்து 11,000க்கும் அதிகமான வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கின்றனர். கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடக்க விழாவிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தொடக்கவிழாவில் ஜப்பான் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் ஜப்பான் நாட்டு கொடி ஏற்றப்பட்டது.
இதுவரை இல்லாத வகையில் நாடுகளின் கொடிகளை ஏந்தி செல்வதற்கு இம்முறை இருவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இந்தியா சார்பில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம், ஹாக்கி அணி வீரர் மன்பிரித் சிங் ஆகியோர் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏந்தி செல்கின்றனர். தொடக்க விழா அணிவகுப்பில் முதல் நாடாக ஒலிம்பிக்கை தோற்றுவித்த கிரீஸ் நாடு செல்கிறது இறுதி நாடாக தற்போது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் ஜப்பான் செல்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu